சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 44 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு, வாழைத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் நேற்று (28) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​அவர்களில் 29 பேர் பல நாள் மீன்பிடிக் கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 25 பேரும், பெண்கள் 02 பேரும், 18 வயதுக்குட்பட்ட இருவர் அடங்கலாக 29 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஐவர் குறித்த மீன்பிடி கப்பலில் இருந்து கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த மற்றுமொரு பல நாள் மீன்பிடிக் கப்பலை சோதனையிட்டதன் பின்னர் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு குடியேற முயற்சித்த சந்தேகத்தின் பேரில் 18 வயதுக்கு மேற்பட்ட 5 ஆண்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், லங்காபட்டுன, வாழைத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் தங்கியிருந்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறத் தயாரான நிலையில் நேற்று (28) இரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.