தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார்.

வோல்ட் டிஸ்னி நிறுவனத்தின் அழைப்பின் பேரில், இலங்கையில் 18 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஆரம்பத் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் அடுத்த மாதம் அமெரிக்காவில் உள்ள பர்பேங்குக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் டிஸ்னிலேண்ட் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு அழைப்பு விடுத்து வோல்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு இராஜாங்க அமைச்சர் முன்னதாக கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் டிஸ்னி நிறுவன முதலீட்டாளர் உறவுகளின் சிரேஷ்ட உப தலைவரான அலெக்ஸியா எஸ். குவாட்ரானி இராஜாங்க அமைச்சரை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.

மேலும் நவம்பர் மாத இறுதியில் ஆய்வுகளை  நடத்துவதற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அலெக்ஸியா குறிப்பிட்டுள்ளார்.

சரியான விவரங்களை வழங்க முடியவில்லை என்றாலும் 16 முதல் 18 பில்லியன் டொலர் வரை முதலீடு செய்யப்படும் என்றும் இலங்கையின் டொலர் நெருக்கடியைத் தணிக்க தேவையான நிதிப் பாய்ச்சலை முதலீடு வழங்கும் என்றும் அலெக்ஸியா சுட்டிக்காட்டியுள்ளார.

மத்தள விமான நிலையம் உள்ளிட்ட பிரதேசத்தில் உள்ள பாரிய உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவதற்கு இவ்வாறான முதலீடு நன்மை பயக்கும் என இராஜாங்க அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.