13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேரர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்தனர். பாராளுமன்றத்தின் புதிய அமர்வை ஜனாதிபதி ஆரம்பித்து உரையாற்றிய போது பாராளுமன்றத்திற்கு அருகாமையில் மூன்று பீடங்களின் பிக்கு ஒன்றியத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பரகும்பா பிரிவேனா முன்பாக ஆரம்பமான பேரணி, பொல்துவ வீதியை வந்தடைந்த போது பொலிஸார் தலையிட்டனர்.

பிக்குகள் பொலிஸாரின் தடையைத் தாண்டிச் செல்ல முற்பட்ட போதிலும், பொலிஸார் அவர்களைத் தடுத்தனர்.

இதேவேளை, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டாளர் காமந்த துஷார மௌனப் போராட்டமொன்றை நடத்தினர்.

இதன்போது, அவர்களைக் கைது செய்து, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிக்கு எதிராக பிக்குகள் நடத்திய போராட்டத்தில் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் இணைந்து கொண்டனர்.