சீனாவின் ஆதரவு இல்லாமலும் இலங்கைக்கான கடனுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆலோசித்து வருவதாக Bloomberg இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.  இலங்கைக்கான  கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனாவின் ஆதரவு இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், சர்வதேச நாணய நிதியம்  இந்த விடயம் தொடர்பாக பரீசிலித்து வருகிறது. சீனா இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மறுசீரமைப்பது தொடர்பிலான உறுதிப்பாட்டை வழங்குவதை பிற்போட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வௌியாகியுள்ளது.

சீனாவிடம் இருந்து இந்த உறுதிப்பாடு கிடைக்காமையே இலங்கைக்கு கடன் வழங்குவதில் தாமதம் ஏற்படக் காரணமாகும்.

பாரிஸ் கிளப் (Paris Club)ஏற்கனவே இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு முறையான ஆதரவை வழங்கியுள்ளது.

இலங்கையின் இருதரப்புக் கடனில் சுமார் 52% பங்கு வகிக்கும் சீனா, அரசுக்கு சொந்தமான ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (EXIM) மூலம் கால நீட்டிப்புகளை மாத்திரமே வழங்கியுள்ளது.

கடந்த மே மாதத்தில் இலங்கை கடனை திருப்பிச் செலுத்தத் தவறியதில் இருந்து கடன் பேச்சுவார்த்தைகள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டது. இதனால், கடுமையான விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டு,  வெளிநாட்டு நாணய கையிருப்பும் குறைந்தது. நாட்டின் பணவீக்கமும் கடன் செலவுகளும் உயர்ந்து பொருளாதாரம் மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என  Bloomberg குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமையை மாற்ற IMF-இன் பிணையெடுப்பும் பிற நிதி உதவியும் தேவைப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.