உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு கோரியும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியினால் தலவாக்கலையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்த கட்சியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துககொண்டனர்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டப்படி மார்ச் 9 ஆம் திகதி நடத்துமாறு கோரி, மஸ்கெலியா நகரில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய லங்கா சுதந்திரக் கட்சியினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மஸ்கெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர். இதன்போது, அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைக்க கோரியும், நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வை வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், தேர்தலை உரிய வகையில் நடத்துமாறும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.