சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) இலங்கை கோரியுள்ள கடன் வசதிக்காக, சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீன வௌிவிவகார அமைச்சின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அதன் ஊடகப் பேச்சாளர் மாவோ நின்ங்(Mao Ning) இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த ஒத்துழைப்பு தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி ஏற்கனவே இலங்கை நிதி அமைச்சிடம் வழங்கியுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 – 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செலுத்த வேண்டிய கடனை செலுத்துவதற்கு இலங்கைக்கு 02 வருட கால அவகாசம் வழங்கப்படும் என இணக்கப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் சீனா இணைந்து செயற்படும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.