அபிவிருத்தி குன்றிய நாடுகள் தொடர்பிலான  ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது மாநாடு தற்போது கட்டாரின் டோஹா நகரில் இடம்பெற்று வருகின்றது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். குறித்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, கட்டார் அரசாங்கத்தின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுல்தான் பின் அல் சாத் முராய்க்கியை சந்தித்துள்ளார்.

இலங்கையில் பொறியியல் பட்டப்படிப்பை கட்டார் அங்கீகரிப்பது தொடர்பிலும் கட்டாரில் கிரிக்கெட்டை மேம்படுத்த இலங்கையின் தொழில்நுட்ப உதவியை வழங்குவது  உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்து பலஸ்தீனத்திற்கு இலங்கை ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இத்தாலியின் வெளிவிவகார பிரதி அமைச்சர் மரியா திரிபோடியையும் சந்தித்த தாரக பாலசூரிய, இரு தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.