அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

தேர்தலை நடத்துதல், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், பொருட்களின் விலை மற்றும் வரிச்சுமை ஆகியவற்றை குறைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பு கோட்டையில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தது.

எனினும், கொழும்பு கோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்நுழைவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவொன்றை பொலிஸார் பெற்றுக்கொண்டிருந்தனர்.

இதற்கமைய, கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்ற போது நீதிமன்ற உத்தரவை பொலிஸார் அறிவித்தனர்.

இதனால், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அந்த இடத்தில் இருந்து விலகி கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர்.