தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) இன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின், சமூக மேம்பாட்டு பிரிவால், 19.03.2023 ஞாயிற்றுக்கிழமையன்று திருகோணமலை, பாலையூற்று, முருகன்கோவிலடி பகுதியில் வாழும், வறுமைக்கோட்டிற்கு கீழ்பட்ட குடும்பங்களைச் சார்ந்த சிறார்களின் கற்றல் நடவடிக்கையை மேம்படுத்தும் முகமாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு கட்சியின் மாவட்ட மகளிர் பிரிவுத் தோழி இரா. வசந்தினி(இந்திரா) அவர்களின் ஏற்பாட்டில், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் மதியழகன் தலைமையில், பாலையூற்று முருகன் கோவிலடியில் அமைந்துள்ள இல்லமொன்றில் இடம்பெற்றது.
இன விடுதலைப் போராட்டத்தில் மரணித்த அனைத்துப் போராளிகளையும் பொதுமக்களையும் நினைவுகூர்ந்த ஒருநிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. தொடர்ந்து, தெரிவுசெய்யப்பட்ட 13 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்விற்கான ரூ 50,000/- நிதி அனுசரணையை தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ஜேர்மன் கிளையின் நீண்டகால ஆதரவாளர்களான சொலமன் ஜெயா தம்பதிகள் மற்றும் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரும், கழக மத்தியகுழுவின் ஜெர்மன் கிளைப் பிரதிநிதியுமான தோழர் ஜெகநாதன் அவர்களின் குடும்பமும் வழங்கி இருந்தனர்.
உதவி வழங்கும் நிகழ்வில்,
பாலையூற்று Red Diamond Club விளையாட்டுக் கழகத் தலைவர் த.கண்ணன், செயலாளர் பி.பிரதீஸ் மற்றும் உறுப்பினர்களான கபிலன், சந்திரசேகர், நிரோசன், சின்னத்தம்பி ஆகியோரும் பயனாளிகளின் குடும்பத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.
கட்சியின் சார்பில், தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர் (ஆ.சிறீஸ்கந்தராஜா), மத்திய குழு உறுப்பினர் தோழர் அசோக் (சி.யேசுதாசன்), மாவட்ட பொருளாளர் தோழர் பகீர் (சு.பகீரதன்), தோழர். சி.ஜெயமோகன் (வக்கீல்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து, Red Diamond Club விளையாட்டுக் கழகத்தினருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதன்போது அவர்கள் தங்களுடைய பகுதியில் உள்ள குறைபாடுகளையும் தேவைகளையும் எடுத்துரைத்தார்கள்.
தங்களுடைய விளையாட்டு மைதானத்தின் பழுதடைந்த மின்குமிழ்களை மாற்றியமைத்துத் தருமாறும் கேட்டுக்கொண்டார்கள். நிகழ்வின் நிறைவாக, தோழி வசந்தினியின் நன்றி உரை இடம்பெற்றது.