பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எதிராக 77 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் சமர்ப்பித்தார்.

அதன் மீதான விவாதத்தை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆரம்பித்து வைத்தார்.

பொதுஜன பெரமுன, அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சிலரும் ஜனக்க ரத்நாயக்கவை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து  நீக்குவதற்காக பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திசாநாயக்க, எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படும் அனுர பிரியதர்ஷன யாப்பா,  ஜோன் செனவிரத்ன, குமார் வெல்கம ஆகியோரும் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினூடாக பாராளுமன்றத்திற்கு சென்ற வடிவேல் சுரேஷ் மற்றும் A.H.M.பௌஸி ஆகியோரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 24 பேர் வாக்களிப்பின் போது சபையில் இருக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி,  மேலவை இலங்கை கூட்டமைப்பு, சுதந்திர மக்கள் கூட்டணி ,  தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

இதேவேளை, தங்கம், கையடக்க தொலைபேசிகளுடன்  சுங்கத்தின் பொறுப்பில் இருந்த  பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமும் பாராளுமன்றத்திற்கு இன்று வருகை தந்திருந்தார்.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், ஆளும் கட்சியின் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்.