அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொடர்பான யோசனை நிறைவேற்றப்பட்டால் 06 மாதங்களுக்குள் தற்போது ஔிபரப்பு சேவையை முன்னெடுக்கும் 33 நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்தாகுமென ஞாயிறு மவ்பிம பத்திரிகை இன்று(11) செய்தி வௌியிட்டுள்ளது. நாட்டில் தற்போது உள்ள 33 ஔிபரப்பு சேவை நிறுவனங்கள், 1966 ஆண்டின் 37 ஆம் இலக்க வானொலி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழும் 1982 ஆண்டின் 06 ஆம் இலக்க ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழும் அனுமதிப்பத்திரம் பெற்று இயங்குகின்றன.

ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டால் இந்த 33 ஊடக நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்களும் 06 மாதங்களுக்குள் இரத்தாகுமென மவ்பிம பத்திரிகையின் இன்றைய பிரதான தலைப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார, சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தவறினாலும் ஒடுக்குமுறை சட்டங்களை ஒரே இரவில் நிறைவேற்றிக் கொள்வதில் திறமையை கொண்டுள்ளதாகவும் மவ்பிம செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 மாதங்களுக்குள் 35 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமை, இதற்கான மிகச்சிறந்த உதாரணமெனவும் மவ்பிம பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மூவரடங்கிய விசாரணைக் குழுவை நியமித்து, ஆணைக்குழு கூறுவதை கேட்டு செயற்படாத ஊடக நிறுவனங்களுக்குள் அத்துமீறி பிரவேசித்து, வழக்கு தாக்கல் செய்து, ஊடகவியலாளர்களை சிறையிலடைத்து, அபராதம் விதித்து, அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யும் அதிகாரம் வழங்கப்படவுள்ள இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால், இலங்கை இன்றைய உலகில் அதிக தணிக்கைக்கு உள்ளான ஊடகங்களைக் கொண்டுள்ள வட கொரியாவாக மாறுமா என மவ்பிம பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

மேற்கோள் ஆரம்பம்

180 நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட 2022 ஊடக சுதந்திரம் தொடர்பான தரப்படுத்தலில், வட கொரியா இறுதி இடத்திற்கு தரப்படுத்தப்பட்டதுடன் நாட்டில் அனைத்து ஊடகங்களும் வட கொரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளன.

அனைத்து ஊடகங்களும், கொரியாவின் மத்திய தகவல் முகவர் நிறுவனத்திடமிருந்தே செய்திகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதுடன் அனைத்து ஊடக அறிக்கைகளும் அரசாங்கத்தின் மேற்பார்வைக்கு உள்ளாக்கப்படுகின்றன.

நாட்டின் வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் வட கொரியாவின் அதிர்வெண்களுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் சேவைகளை மாத்திரமே பிரஜைகளினால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.

வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேற்கோள் முடிவு

இந்த யோசனை ஊடகத்திற்கு மாத்திரம் எதிரானது அல்லவென்பதை எமது நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் நினைவிற்கொள்ள வேண்டும்.

இது மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக இடம்பெறும் ஒன்றாகும்.

ஏனெனில் ஒரு ஆரோக்கியமான நவீன ஜனநாயக நாட்டில், சுதந்திரமான ஊடகங்கள் மூலம் மக்கள் தமது கருத்துகளையும் அரசியல் சுதந்திரத்தையும் வெளிப்படுத்த முழு இடம் உள்ளது.

ஒரு ஊடக நிறுவனத்திற்கு எதிராக இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், சாதாரண மக்கள், வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், மாணவர்கள், சாரதிகள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரது பிரச்சினைகளையும் வௌிக்கொணர முடியாமற்போகும்.

மறுபுறம் அதிகாரம் கொண்டவர்களின் மோசடிகளை வௌிக்கொணர்வதற்கும் எவ்வித சந்தர்ப்பங்களும் கிடைக்கப்போவதில்லை

அவ்வாறெனில் இந்த உத்தேச சட்டமூலமானது ஊடகங்களுக்கு எதிரானதா,  மக்களுக்கு எதிரானதா? என்பது தொடர்பில் மக்கள் இரு தடவை சிந்திக்க வேண்டும்.