Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பு உலகின் பிரதான கப்பல் போக்குவரத்து மார்க்கத்தை கேந்திரமாகக் கொண்டு அமைந்துள்ளது. பாரியளவிலான கப்பல்கள் பயணிக்கும் கிழக்கு , மேற்கு கப்பல் பாதை தெய்வேந்திரமுனையில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் உள்ளது. வருடத்திற்கு சுமார் 40,000 கப்பல்கள் இலங்கை ஊடான  கப்பல் மார்க்கத்தை பயன்படுத்துகின்றன. எவ்வாறாயினும், இந்த கப்பல் மார்க்கத்தை இலங்கையில் இருந்து தூரமாக்க வேண்டும் என IMO எனப்படும் சர்வதேச கடல்சார் அமைப்பு  பரிந்துரைத்துள்ளது.

தெய்வேந்திரமுனையில் இருந்து 15 கடல் மைல் தொலைவிலேயே இந்த கப்பல் மார்க்கம் இருக்க வேண்டும் என  கடந்த ஏப்ரல் மாதம் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு சில சர்வதேச கடல்சார் சுற்றாடல் அமைப்புகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில்  அதிகளவில் திமிங்கிலம் காணப்படுவதுடன், அவற்றுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக IMO ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரிய கப்பல்களில் மோதி திமிங்கிலங்கள் உயிரிழப்பதால், கப்பல் மார்க்கத்தை மேலும் தொலைவிற்கு நகர்த்த வேண்டும் என  சர்வதேச கடல்சார் அமைப்பிற்கு சுற்றாடல் அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.

2012 ஆம் ஆண்டின் ஆய்வின் பிரகாரம், 3  திமிங்கிலங்கள் அவ்வாறு உயிரிழந்துள்ளன.

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடல் பகுதி மற்றும் தென் பகுதி கடலில் இந்த திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு  மீன்பிடி படகுகளிலும் கப்பல்கள்  மோதுகின்றமையினாலும் கப்பல் மார்க்கத்தை தொலைவிற்கு நகர்த்த வேண்டும் என  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், தெய்வேந்திரமுனையில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் கப்பல் மார்க்கத்தை  மீள ஏற்படுத்த வேண்டும்.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 76 கடல் மைல் தொலைவிலும் காலி துறைமுகத்தில் இருந்து 25.6 கடல் மைல் தொலைவிலும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 26.9 கடல் மைல் தொலைவிலும் புதிய சர்வதேச கப்பல் மார்க்கம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு, நாரா (​NARA) உள்ளிட்ட பல நிறுவனங்கள் கலந்துரையாடியிருந்தன.

இந்த விடயத்திற்கு தாம் இணங்கப் போவதில்லை என நாரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கப்பல் மார்க்கத்தை  15 கடல் மைல் தூரத்திற்கு மாற்றினால் ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு பாரிய பாதிப்பு  ஏற்படும் என  நாரா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் நாட்டின் நிலைப்பாட்டினை  சர்வதேச கடல்சார் அமைப்பிற்கு  அறிவிக்க வேண்டியுள்ளதுடன் அதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று ஜூலை மாதம் பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளது.

Sea of Sri Lanka முக்கிய கேந்திர நிலையமாக காணப்படுவதுடன், இயற்கை வளங்களைக் கொண்ட விலைமதிப்பற்ற சொத்தாகும்.

விலைமதிப்பற்ற சொத்தினை பாதுகாக்கும் அதேவேளை, பொருளாதார ரீதியில்  சிறந்த பலனை பெறுவதற்கு விடயத்திற்கு  பொறுப்பானர்கள் முன்வருவார்களா?

உரிய ஆய்வினை மேற்கொண்டு  இந்த விடயத்தில்  உடனடியாக தலையீடு செய்ய வேண்டியது அவசியமல்லவா?