தாயகக் குரல் –ஜனாதிபதி ரணில் நாட்டுக்கு நல்ல தலைவர் – நாம் நம்பலாமா? அவர்தன்னும் நிரூபிப்பாரா?
தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசமான முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையைச் சுற்றியுள்ள நிலங்கள் வெளியாருக்கு வழங்கப்படமாட்டாது எ ஜனாதிபதியின் செயலாளர் திரு. சமன் ஏக்கநாயக்க அவர்கள், பௌத்த மேலாதிக்கச் சிந்தனையாளர் எல்லாவல மேதானந்த தேரருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கூடவே, குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள வயல் நிலங்கள் பற்றிய விளக்கத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி செயலகப் பிரிவினால் தெரிவிக்கபபட்டுள்ளது.
தமிழ் இனவாதிகளால் குருந்தூர் மலைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தேரர் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு பதிலளிக்கவே ஜனாதிபதி ரணில் முயன்றுள்ளார். வடக்கில் உள்ள விகாரைகள் தமிழ்ப் பௌத்தர்களுக்கு உரித்தானவை எனும் வரலாற்று உண்மையை காலம் தாழ்த்தியேனும் ஒரு பௌத்த சிங்கள அரசியல்வாதியான ஜனாதிபதி ரணில் அவர்கள் வலியுறுத்தியதன் விளைவே மேற்கூறப்பட்ட நடவடிக்கைகள்.
தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்(?) அனுர மனதுங்க தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 12 ம் திகதி சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரிடம் கையளித்திருந்தார். அதனை அடுத்தே சற்று அடங்கிப் போயிருந்த மகாசங்கத்தினரின் இனவாதக் கூக்குரல்கள் மீண்டும் ஆங்காங்கே ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
கீழ்த்தட்டு, மேல்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினரைக் கணிசமாக கொண்டுள்ள சிங்கள சமூகத்தின் ஒரு வருடத்திற்கு முந்திய போராட்டம் ஆட்சியாளர்களை விரட்டியடித்தது மட்டுமல்லாது பௌத்த மதத் தலைவர்களையும் மகாசங்கத்தினரையும் கூட ஆட்சி அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க வைத்தது. நாட்டின் மீட்பராக அதிகாரத்திற்கு அழைத்து வரப்பட்ட கோட்டாபயவை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மகாசங்கத்தினர் யாருமே அன்று முயற்சிக்கவில்லை.
மகாசங்கத்தினரின் வழிகாட்டலுடன் நடாத்தப்படுகின்ற அரசாங்கங்கள் என உரிமைக் கோரிக்கொண்ட ஆட்சித் தலைமைகளால் உருவாக்கப்பட்ட , வரலாற்றில் சிங்கள சமூகம் முன்பு சந்தித்திராத உணர்ந்திராத பொருளாதார அழிவு நிலையையும், அவலப்பட்ட வாழ்க்கையையும் பேரினவாதத்தின் பெயராலோ அன்றி பௌத்த மதத்தின் பாதுகாப்பின் பெயராலோ நியாயப்படுத்த மகாசங்கத்தினர் எவரும் தயாராக இருக்கவில்லை.
என்றைக்குமே தமக்கு ஒவ்வாதவர் என கருதப்படுகின்ற ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகி, ஜனாதிபதியாகியபோது மகாசங்கத்தினரால் சிறிய அளவில்கூட தமது அதிருப்தியை வெளிப்படுத்த முடியவில்லை. அவ்வாறானவர்களுக்கு தற்போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் விவகாரம் மூலம் துரும்பொன்று கிடைத்துள்ளது. அவ் விவகாரத்தை ஊதிப் பெருக்கும் வழிகளையே சிங்கள இனவாதிகள், பௌத்த மதவாதிகள் இன்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் மட்டுமல்லாது, ஜனாதிபதி ரணிலை பலவீனப்படுத்த சந்தர்ப்பம் பார்த்திருந்த பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பலவும் வாய்ப்பைப் பயன்படுத்தக் காத்திருக்கின்றன. ஆனாலும், தமிழர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட, சிங்கள சமூகம் கனவிலும் நினைத்திராத அவலமான பொருளாதாரச் சீரழிவு நிறைந்த வாழ்க்கை முறையில் இருந்து சற்றேனும் விடுபட்டிருக்க ஒரே காரணம் என பெரும்பாலான சிங்கள மக்கள் நம்புகின்ற, குறிப்பாக குடும்பத் தலைமைத்துவத்தில் உள்ள பெண்கள் நம்புகின்ற ஜனாதிபதி ரணிலின் தலைமைத்துவத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்க மதவாத இனவாத சக்திகள் தயாராக இருந்தாலும் அவற்றின்பின் அணிதிரள பெரும்பாலான மக்கள் தற்போதைய நிலையில் தயாராக இல்லை.
இத்தனைக்கும் ஜனாதிபதி ரணில் அவர்கள் குருந்தூர் மலையில் தமிழர்களின் பூர்வீகக் காணிகள் பறிக்கப்பட்டதற்காகத்தான் கூட்டத்தில் வைத்து பணிப்பாளரை பகிரங்கமாக கண்டித்ததாக அறியமுடியவில்லை. நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான தனது அறிவுறுத்தல்களை அல்லது உத்தரவுகளை செயற்படுத்தாமை குறித்தே ஆத்திரப்பட்டிருந்தார்.
தொடர்ச்சியாக, பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி ரணில் வழங்கியிருந்த உத்தரவுகளை, ஆயுதங்கள் அற்ற இன அழிப்பு யுத்தம் ஒன்றை தமிழினத்துக்கு எதிராக நடாத்திக் கொண்டிருக்கும் தொல்லியல் திணைக்களம் தொடர்ச்சியாக உதாசீனப்படுத்த வந்தமை அனைவரும் அறிந்ததே. காரணம், தொல்லியல் திணைக்களம் என்பது எப்போதுமே நாட்டின் அனைத்து சமூகங்களுக்குமானஅரச நிறுவனமாக அல்லாது மகாசங்கத்தின் ஒரு பிரிவாகவே செயற்படுகிறது. நாட்டின் இராணுவமோ அதன் படைப்பிரிவாகவே வடக்கு கிழக்குப் பகுதிகளில் செயற்படுகிறது.
மகாசங்கத்தின் பரிந்துரைக்கமைய பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் தொல்லியல் திணைக்கள நடவடிக்கைகளுக்கு நிதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனதன் காரணமாக திணைக்களமும் மகாசங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே செயற்படுகிறது. இது ஜனாதிபதி ரணில் அறிந்திராத விடயமல்ல. ஆனாலும் தொல்லியல் திணைக்கள விடயத்தில் ஜனாதிபதி ரணிலின் கையாலாகாத்தனத்தை பலர் முன்னிலையில் தமிழ்ப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியபோது ஏற்பட்ட அவமானகரமான நிலையே ஜனாதிபதி ரணில் – பணிப்பாளர் விவகாரத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது எனத் தெரிகிறது.
அண்மையில் ஜனாதிபதி ரணிலை அஸ்கிரிய பீடாதிபதி சந்தித்திருந்த வேளையில் நேரடியாக முன்வைத்திருந்த கோரிக்கைகளில், வடக்கு கிழக்கிலுள்ள பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்கு தடைகள் ஏதும் ஏற்படக்கூடாது என்பதும் தொல்லியல் திணைக்களத்துக்கு கிடைக்கு வெளிப்புற உதவிகள் தடை செய்யப்படக்கூடாது என்பதும் பிரதானமாக அமைந்திருந்தன.
மகாநாயக்கர்கள், மகாசங்கத்தினர், அரசாங்கங்கள் அனைத்தையும் பொறுத்தவரையிலும் தொல்லியல் திணைக்களம் என்பது அரச நிறுவனமாக இருந்தாலும் அதன் ஒரே பணி பௌத்த மேலாதிக்கத்தை பாதுகாத்து விரிவுபடுத்துவதும் அதன்மூலம் இலங்கைத் தீவை முழுமையான பௌத்த நாடாக மாற்றுவதுமே என திடமாக நம்பிச் செயற்படுகின்றன.
இவ்வாறான ஒரு நிலையில், வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகளை புனரமைக்கும் திட்டத்துக்குரியவான ஜனாதிபதி ரணில் வடக்கின் விகாரைகள் தமிழ்ப் பௌத்தர்களுடையவை எனச் சொல்லி வைத்துள்ள புள்ளியை தமிழர்களுக்குரிய கோலமாக்குவது எமது பணியாகும். குறிப்பாக தமிழ்த் தொல்லியலாளர்கள் காத்திரமான முறையில் தமது பணியை தொடர இதுவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். பௌத்தம் என்றால் அது சிங்களவர்களுடையது மட்டுமே எனும் ஆபத்தான வரலாற்றுத் திரிபினை இன் அழிப்பின் கருவியாக்கி அதன் விளைவுகளை ‘யுனெஸ்கோ’வரை நாம் கொண்டுசெல்ல வேண்டும்.
இழப்பதற்கு எதுவுமற்ற மனிதனால் மட்டுமே தனது அடுத்த கட்ட அதிகாரத்திற்காக கண்மூடித்தனமாக போராட முடியும். ஜனாதிபதி ரணிலும் அவரது கட்சியும் இழப்பதற்கென்று எதுவுமற்றவர்கள். நாட்டின் இராணுவத்தையும் நாடாளுமன்றின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவையும் கட்டி ஆளும் கலையைக் கற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி ரணிலால் தொல்லியல் திணைக்களத்தின் அடிபணியாமையை ஏற்றுக் கொள்ள முடியாததால் ஏற்பட்ட நிகழ்வுகள்தான் குருந்தூர் மலையைச் சுற்றிச் சுழல்கிறதா? அல்லது நாட்டுக்கு ஒரு நல்ல தலைவனாக, தனது இறுதியானதும் உச்சமானதுமான அதிகரத்தின் மூலம் நாட்டின் எதிர்காலத்தை சிறந்த முறையில் உருவாக்கும் செயற்திட்டத்தின் ஆரம்பமா? அல்லது பௌத்த பேரினவாத அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து வழக்கம்போல, மாறுபட்ட தீர்மானங்களை மேற்கொண்டு தொடர்ந்தும் ஒரு பலவீனமான அரசியல்வாதியாக செயற்படுவாரா என்பதை தமிழர்கள் நாம் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.
கே.என்.ஆர்
17.06.2023