இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார். Locomotive operator பொறியியலாளர் சங்கத்தினர்  முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பிற்கு பதில் வழங்கும் வகையில்  அமைச்சர் இதனை கூறியுள்ளார். இன்று காலை முதல் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஸ்கரிப்பு  காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் சேவையில் ஈடுபட்டமையினால், மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, இன்று காலை ஹொரபே ரயில் நிலையத்தில் அலுவலக ரயிலின் மேற்கூரையில் இருந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வழமையாக  6.05 மணிக்கு சேவையில் ஈடுபடும் ரயில் இன்று வரவில்லை.

Locomotive operator பொறியியலாளர் சங்க உறுப்பினர்களின் பணிப்பகிஸ்கரிப்பின் காரணமாக இன்று 6.45 வரை ரயில் தாமதமாகியுள்ளது.

அலுவலகத்திற்கு செல்லும் நேரம், மாணவர்கள்  பாடசாலைக்கு செல்லும்  நேரம் என்பதினால்,  ரயில் கம்பஹா வந்தடைந்த போது பயணிகள் நிரம்பியிருந்தனர். இதனால் ரயிலின் மேற்கூரையிலேயே இடம் இருந்துள்ளது.

ராகம மற்றும் களனிக்கு இடையில் உள்ள ஹொரபே ரயில் நிலையத்தின் கூரையில் இளைஞரின் தலை மோதியுள்ளது.

இந்துவர சென்ற அதே ரயிலில் அவரது சடலம் ஹுனுபிட்டிய ரயில் நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டது.

கம்பஹா – மொரகொட பகுதியை சேர்ந்த தினித் இந்துவர எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.