சட்டவிரோத மீன்பிடி முறைகளை நிறுத்துமாறு கோரி திருகோணமலை மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை – சிறிமாபுரவிலிருந்து பேரணியாகச் சென்ற மீனவர்கள் திருகோணமலை நகரம் ஊடாக மீன்பிடி மற்றும் நீரியல்வள திணைக்களம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணித்தியாலங்கள் கண்டி – திருகோணமலை வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குறித்த வீதியினூடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து பொலிஸார் மற்றும் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.