பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்றிட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென் கொரிய ஜனாதிபதி Yoon Suk Yeol தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான தென் கொரிய நிரந்தர வதிவிட தூதுக்குழு அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை தென் கொரிய ஜனாதிபதி பாராட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் தென் கொரியாவிற்கு இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இரு தலைவர்களும் இந்த சந்திப்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தென் கொரியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு தென் கொரிய ஜனாதிபதி Yoon Suk Yeol, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் நேற்று(18) ஆரம்பமானது.
இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.