இலங்கையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலான அரச எதிர்ப்புக்களையும் தடுப்பதற்கு சட்ட அமுலாக்கத்துறையினர் முனைப்புக் காட்டுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்கு இடையில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட 30 போராட்டங்கள் குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த போராட்டங்களுடன் தொடர்புடைய 95 காணொளிகள் தொடர்பில் இதன்போது திறந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச நியமங்களுக்கு இணங்காத பொதுக் கூட்டங்களில் இலங்கை அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் மற்றும் அணுகுமுறை இலங்கையில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை கட்டுப்படுத்துகிறது. எதிர்ப்பை ஒடுக்குவது நிறுத்தப்பட வேண்டும்.
அத்துடன் இலங்கையில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் எனவும் சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையிலான பொதுக் கூட்டங்களை இலங்கை அதிகாரிகள் அங்கீகரிக்க வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் அதனை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.