18.04.2016ல் மரணித்த மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் தோழர் சிங்கம் (பெனடிக்ட் தனபாலசிங்கம்) அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று….யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட பெனடிக்ட் தனபாலசிங்கம் (சிங்கம்) அவர்கள் தனது இளம் பராயத்திலேயே சமூக சேவைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். தனது ஆரம்ப அரசியல் பணிகளை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ.இராஜதுரை அவர்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் முன்னெடுத்திருந்தார்.
1983 இனக் கலவரத்தினைத் தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட தோழர் சிங்கம் அவர்கள், கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினராகவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினராகவும், கட்சியின் உப தலைவர்களுள் ஒருவராகவும் மரணிக்கும்வரை தொடர்ச்சியாக இடையறாது தனது மக்கள் பணியினைத் தொடர்ந்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உதவி மேயரும், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் நகரபிதாவுமான பெனடிக்ட் தனபாலசிங்கம் (சிங்கம்) அவர்கள், மக்கள் பணிகளிலே சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.
அவர், மட்டக்களப்பில் மாத்திரமல்லாது யாழ், வன்னி மாவட்டங்களிலும் மக்களுக்கான தனது அர்ப்பணிப்புமிக்க அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்தார்.
கிழக்கின் வளர்ச்சியிலும், அமைதியிலும் ஆழ்ந்த பற்றும் உறுதியும் கொண்டிருந்த அவர், தன்னலமற்ற சேவையினை மக்களுக்கு ஆற்றுவதிலே நிகரற்று விளங்கியவர் என்பதோடு, சுகயீனங்களுக்கு மத்தியிலும் கூட கழகத்தின் பணிகளிலே மரணிக்கும் வரையில் இடையறாது தனது பங்களிப்பை செலுத்தி வந்தார்.