ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் மட்டக்களப்பு மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டணியின் செயலாளர் நா. இரட்ணலிங்கம், தேசிய அமைப்பாளர் கோ.கருணாகரம் (ஜனா), துணைத் தேசிய அமைப்பாளர் இரா.துரைரெட்ணம், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள்லன க.சிவநேசன், நகுலேஸ் மற்றும் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் அம்பாறை மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று பகல் 10.00 மணியளவில் நடைபெற்றது.
திருகோணமலை – முத்துநகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து ஏனைய நாடுகளுக்கு விற்க வேண்டாம் எனக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 200 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் பிரதான தொழிலாக விவசாயத்தையே நம்பி வாழ்வதாகவும், துறைமுக அதிகார சபையினர் தங்கள் காணிகளை பெற்று இந்தியாவுக்கு வழங்க முயற்சிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் பதவி வகிப்பதாக தெரிவித்து பலர் மோசடி சம்பவங்களில் ஈடுபடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள், தொழில் கோரும் இளைஞர்கள் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்களிடம் அவர்கள் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான மோசடியாளர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டில் சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாங்கள் மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் வருமானத்தை அதிகரிக்கும் ஏனைய மூலங்கள் தொடர்பாக கவனம் செலுத்துகின்றோம் இதுவரை இலங்கையில் 20 வீதம் நேரடி வரிகளும் 80 வீதம் மறைமுக வரிகளும் நடைமுறையில் இருந்தன. இன்று நேரடி வரியை 30 வீதமாகவும் மறைமுக வரியை 70 வீதமாகவும் மாற்றியிருக்கிறோம்.
இலங்கை உள்ளிட்ட இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்புக்கு ஆதரவாக விமானம் ஒன்றை வழங்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் பிரதி செயலாளர் மிச்செல் சான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அதன்போது, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.