பிரதம நீதியரசர் தவிர உயர் நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்கவோ அல்லது பரிந்துரைக்கவோ ஜனாதிபதிக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில், ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றத்தினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை நிராகரித்து,

சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு பேரவை அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தெரிவித்து நபரொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டத்தரணி பி.பீ.எஸ்.எம். பதிரனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

S.துரைராஜா, A.H.M.D.நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய உயர் நிதீமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முறையான நடைமுறையை பின்பற்றாது, உயர் நீதிமன்றத்திற்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட நீதியரசரின் பரிந்துரையை நிராகரித்ததன் மூலம்,

அரசியலமைப்பின் 12 ஆவது சரத்தின் கீழ் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை விசாரணை செய்வதற்கு நீதியரசர்கள் குழாம் அனுமதி வழங்கியது.

மனு மீதான விசாரணைக்கு அனுமதி வழங்கிய நீதியரசர்கள் குழாம், விசாரணை நிறைவடையும் வரை அமுலாகும் வகையில், இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.

மனு மீதான விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.