Online ஊடாக கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடைமுறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஹோமாகம பிரதேச செயலகத்தில் இதன் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.  அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

மக்கள் மிகவும் இலகுவாக கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதன்போது தெரிவித்தார்.

புதிய நடைமுறைக்கமைய, விண்ணப்பத்தை சமர்ப்பித்து மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டினை courier சேவையின் ஊடாக வீட்டிற்கே வரவழைத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக ஒரே நாளில் கடவுச் சீட்டை வழங்கும் செயற்றிட்டமும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Online ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு www.immigration.gov.lk எனும் இணைய முகவரிக்குள் பிரவேசித்து தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெறும் குறியீட்டினை பதிவு செய்வது அவசியமாகும்.

இதன் பின்னர் ஆவணங்களின் மூலப்பிரதியை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்த பின்னர், உரிய மத்திய நிலையத்தின் ஊடாக கைவிரல் அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைவிரல் அடையாளம் பதிவு செய்யப்பட்ட பின்னர்,  விரைவான  சேவையின் ஊடாக 3 நாட்களிலும் சாதாரண சேவையின் கீழ் 14 நாட்களிலும் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.