யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் இடது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய தாதிக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து யாழ். நீதவான் A.A.ஆனந்தராசா உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறுமியின் பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக்கடதாசி மற்றும் பொலிஸாரின் அறிக்கைகளை கருத்திற்கொண்டு, சம்பவத்துடன் தொடர்புடைய தாதிக்கு தற்காலிகமாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் இடது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை தொடர்பில் இதுவரை எவரும் சந்தேகநபராக அடையாளங்காணப்படவில்லை.
எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் வௌிநாடு செல்லவுள்ளதாக கிடைத்த தகவலுக்கமையவே, மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் விண்ணப்பத்திருந்ததுடன், பொலிஸாரும் தமது அறிக்கைகளை மன்றில் முன்வைத்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட விடயத்திற்கு நீதி கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களால் யாழ். போதனா வைத்தியசாலை நுழைவாயிலை மறித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதியை மறித்து வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி, ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிப்பதற்கு பொதுமக்களிடம் கையழுத்து சேகரிக்கும் நடவடிக்கையும் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.