இன்று தனது எழுபத்தைந்தாவது பிறந்த நாளைக் கடந்து செல்லும் எமது தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கு எம் அனைவரினதும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அரை நூற்றாண்டு கடந்த அனுபவமும், அறிவும் நிறைந்த எமது மூத்த தோழர் இன்னும் பல ஆண்டு காலம் முன்னின்று செயற்பட வேண்டுமென்று உரிமையுடன் இந்நாளில் வேண்டுகிறோம்.
எளிமை, தோழமையான அணுகுமுறை, அரசியல் ஆளுமை எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்,

மக்களை நேசிக்கும், மக்களின் விடுதலையை நோக்கிய செயற்பாடுகளுடன் பயணிக்கும் அமைப்பொன்றின் தலைமை கொண்டிருக்க வேண்டிய முன்னுதாரணங்களை இயல்பாகவே தனது வாழ்வில் கடைப்பிடித்து வருபவர்,
உணர்ச்சியூட்டும் சொற்களாலும், செயற்பாடுகளாலும் மீண்டும் ஒரு தடவை எமது மக்கள் பேரவலம் ஒன்றை நோக்கி இழுத்துச் செல்லப்படக் கூடாது என்பதில் உறுதியான, நிதானமான அணுகுமுறைகளைக் கொண்டிருப்பவர் எனப் பல வகைகளிலும் தனது தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தி எம்மை வழிநடாத்துகின்ற மூத்த போராளி என்றும் நலம் பெற வேண்டுமென விரும்புகிறோம்.
அரசியல் வாரிசு என்பதற்கப்பால், தனது பாடசாலைக் காலம் முதற்கொண்டே மிகவும் அர்ப்பணிப்புடன் தமிழினத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து அகிம்சை, ஆயுதம், ஜனநாயகம் என அனைத்து வழிப் போராட்டங்களிலும் முன்னிலையில் நின்று செயற்படுகின்ற எமது தலைவர், எமது மக்களின் தீர்வுக்கான போராட்டம் அடுத்துவரும் தலைமுறைகளுக்கும் கடத்தப்பட நிர்பந்திக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், எமது மக்கள் மத்தியிலும் அதன் அரசியல் தலைமைத்துவங்களிலும் புற்றுநோய் போல பரவிவரும் சீர்கேடான, மக்கள் நலனுக்கு விரோதமான, ஜனநாயக நடைமுறைகளை கேலிக் கூத்தாக்குகின்ற, சமூக நீதிக்கு தீங்கிழைக்கக்கூடிய செயற்பாடுகளை எல்லாம் துடைத்தெறியக்கூடிய முன்னுதாரணமான தலைவராக தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்பது எங்களது பெருவிருப்பம் ஆகும்.
கட்சியை, ஐக்கியப்பட்ட கூட்டணியை, தமிழ் மக்களை தொடர்ந்தும் வழிநடாத்தும் வல்லமை பெற மீண்டும் ஒருமுறை வாழ்த்தி நிற்கிறோம்.
ஊடகப் பிரிவு
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)