உலக சமாதான தினத்தையொட்டி நாட்டின் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உண்மை கண்டறியப்படல் வேண்டும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனும் விடயங்களை முன் நிறுத்தி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போராட்டங்கள் இன்று இடம்பெற்றன. இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்தக்கோரி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களும் தத்தமது பிராந்தியத்திற்கு பொறுப்பான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
இதனிடையே, உலக சமாதான தினத்தில் அமைதியும் நீதியும் கோரி யாழ்ப்பாணம் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, வவுனியா பத்தினியார் மகுளங்குளம் பகுதியிலும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.
மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சி புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாகவும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச நீதிப் பொறிமுறையினை உறுதிப்படுத்த வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தினர் கொழும்பின் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் போனவர்களின் வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகத்திற்கு முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பின்னர் பேரணியாக சென்றவர்கள் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாகவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.