தொடர்ச்சியாக நட்டமடைந்து வருடம் ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு மாதாந்தம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டு நான்கு விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நான்கு விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ORIX Aviation நிறுவனத்திடமிருந்து மாதாந்தம் 3,60,000 அமெரிக்க டொலர் குத்தகைக்கு, 6 ஆண்டுகளுக்கு இரு விமானங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக 3,65,000 அமெரிக்க டொலர் குத்தகைக்கு 8 ஆண்டுகளுக்கு Aergo Capital Limited நிறுவனத்திடமிருந்து இரு விமானங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளது.
2021 ஆம் ஆண்டு 45,231 மில்லியன் ரூபா நட்டத்தை அடைந்த ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம், 2022 ஆம் ஆண்டில் 1,66,369 மில்லியன் ரூபா நட்டத்தை அடைந்தது.
2023 ஆம் ஆண்டிலும் 73,621 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கிய ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை மறுசீரமைப்பதற்காக தற்போது முதலீட்டாளர்களிடமிருந்து யோசனைகள் கோரப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான நட்டத்திற்கு மத்தியில் ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் சில விமானங்களை பழுதுபார்க்கவும் முடியாமற்போயுள்ள நிலையில், மேலும் 4 விமானங்களை குத்தகைக்கு பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.