தோழர் குமரன் அவர்களுக்கு புளொட் அஞ்சலி

107664-274x300

யாழ். மாதகலைச் சேர்ந்தவரும், பிரான்ஸில் வசித்து வந்தவருமான விஸ்வலிங்கம் பொன்னுத்துரை (குமரன்) அவர்கள் மரணமடைந்தமை எம்மை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
 
78களில் காந்தீயம் ஊடாக மக்கள் சேவையினை ஆரம்பித்த தோழர் குமரன், விடுதலைப் போராட்டத்தின்; ஆரம்பகாலங்களில் புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு கழக செயற்பாடுகளில் முக்கிய பங்கினை வகித்தார்.
அத்துடன் ஆரம்ப காலங்களில் பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்குபற்றியிருந்த அவர், பொதுவுடமை சித்தாந்தத்தில் தீவிர பற்றாளராகவும் திகழ்ந்தார்
புளொட்டின் மத்திய குழு உறுப்பினராகவும், தள அரசியல் செயலராகவும் 84 – 87 காலப்பகுதியில் செயற்பட்டு வந்த தோழர் குமரன், 1987 களின் இறுதிவரை தனது பணியினைத் தொடர்ந்தார்.
தோழர் குமரன் அவர்களின் மறைவு கழகத்திற்கும், அவர் நேசித்த மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். 
அன்னாரருக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் எமது ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துவதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொள்கிறோம்.
 
21.07.2013.         தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (P.L.O.T.E)
                         ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F).

கறுப்பு யூலையின் 30ஆம் ஆண்டு நினைவுகள்-

 

images 4

imagesimages 3

கறுப்பு யூலையின் 30ம் வருட நினைவுதினம் இன்று 23ம் திகதிமுதல் எதிர்வரும் 27ம் திகதிவரை அனுஸ்டிக்கப்படுகின்றது. வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியின்போது அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பெருமளவிலான தமிழ்மக்கள் தமது உடமைகளையும், சொத்துக்களையும் ,இழந்து அநாதரவாக்கப்பட்டனர். தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையைத் தொடர்ந்தே இன விடுதலைப் போராட்ட இயக்கங்களில் பெருமளவு தமிழ் இளைஞர்கள் இணைந்தனர். இலங்கையிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளிலும் கறுப்பு யூலை நினைவு தினம் ஆண்டுதோறும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நியமனக்குழு கூட்டம்-

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நியமனக்குழு கூட்டம் கூட்டமைப்பின் யாழ் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இதன்போது வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கட்சிகளுக்கான வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் இணக்கம் ஏற்பட்டது.இதன்படி வவுனியா மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகியவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் ரெலோ 3 ஆசனங்கள். இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலா 2 ஆசனங்கள், புளொட்டுக்கு ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே யாழ். மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 7 ஆசனங்கள், ஈ.பி.ஆர்.எல்.எவ் 4 ஆசனங்கள், ரெலோ 3 ஆசனங்கள், புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுக்கு தலா 3 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ்க்கு ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்க்கு என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொடடுக்கு தலா ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விக்னேஸ்வரன் நியமனத்தால் நாடு பிளவுபடுமென சந்தேகம் தேவையில்லை-அமைச்சர் ராஜித-

vigneshwaran--sambanthan-Flashதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளமை காரணமாக நாடு பிளவுபடும் என தென்னிலங்கையில் எவரும் சந்தேகம்கொள்ள வேண்டியதில்லை என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.விக்னேஸ்வரனின் வரலாறு, குடும்பப் பின்னணி மற்றும் கல்விப் பின்னணி ஆகியவற்றைப் பார்க்கும்போது அவர் ஒருபோதும் இனவாதத்துக்கு அடிபணியமாட்டார் என்பது தெளிவாகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் முதலமைச்சராக வருவதன்மூலம் ஒருபோதும் நாடு பிளவுபடமாட்டாது. தமிழ் மக்களின் கோணத்திலிருந்து பார்க்கும்போது அவர் ஒரு மத்தியதஸ்தமான மனிதராகவே உள்ளார். அவரின் நேர்காணல்களை நான் அண்மையில் வாசித்துப் பார்த்தேன். தமிழ் மக்களின் ஜீவனோபாய மற்றும் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். மாறாக அரசியல் போராட்டத்தை கட்சி முன்னெடுக்கும் என்பதே அவரின் நிலைப்பாடாக உள்ளது. சி.வி. விக்னேஸ்வரன் கொழும்பில் பிறந்து வளர்ந்தவர். சிங்கள சமூகத்துடன் ஈடுபாட்டுடன் செயற்படுகின்றார். அவரின் குடும்பமும் சிங்கள மக்களுடன் உறவு வைத்துள்ளது. அந்த வகையில் விக்னேஸ்வரனின் வரலாறு குடும்ப பின்னணி மற்றும் படிப்பு ஆகியவற்றை பார்க்கும்போது அவர் ஒருபோதும் இனவாதத்துக்கு அடிபணியமாட்டார் என்பது தெளிவாகின்றது. அதனால் அவரின் வருகையினால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று தென்னிலங்கையில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13ஐ திருத்தும் முயற்சியை கைவிடவில்லை-அமைச்சர் தினேஸ்-

13அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை அரசாங்கம் கைவிடமில்லை. அந்த முயற்சியிலிருந்து அரசாங்கம் பின்வாங்கவுமில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளின் சட்டத் தேவைகள் குறித்து அவதானமாக ஆராய்ந்து வருகின்றோம் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தில் அமைந்துள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களின் தன்மை மற்றும் அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது மேற்கொள்ளப்படவேண்டிய சட்டத் தேவைகள் என்பன தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றோம். உரிய நேரத்தில் தேவையான திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார். 13இல் திருத்தங்களை மேற்கொள்ள முயன்ற அரசாங்கம் இந்தியாவின் கோரிக்கையையடுத்து அந்த முயற்சியை கைவிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளமை பற்றி விபரிக்கையிலேயே அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலங்களில் 143 பொலிஸ் நிலையங்கள் ஊடாக பாதுகாப்பு-

LK policeஎதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் ஒவ்வொரு மாவட்டங்களிற்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மாகாணசபை தேர்தல் இடம்பெறவுள்ள சகல மாவட்டங்களிற்கும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை நியமிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். மாகாணசபை தேர்தல் இடம்பெறவுள்ள வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள 143 பொலிஸ் நிலையங்களினூடாக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இம் மாவட்டங்களிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மற்றும் அமைதிங்கு பங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காமினி நவரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளுக்கு பிரத்தியேக நீதிமன்றம்-

pikku.buddist monkபௌத்த பிக்குகளுக்கு பிரத்தியேக நீதிமன்றம் ஒன்று வெகுவிரைவில் அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற தேர்தல் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பௌத்த விகாரைகள் மற்றும் பிக்குகள் தொடர்பான முறைப்பாடுகள், பிணக்குகள் போன்றவற்றைக் கையாள பொது நீதிமன்றங்களுக்கு செல்லாமல் தீரத்துக் கொள்ள இந்நீதிமன்றங்கள் உதவும். அத்துடன் பௌத்த மதகுருக்கள் கௌரவமிழக்காத வகையில் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு இத்தகைய நீதிமன்றங்கள் வழிவகுக்கும் என பிரதமர் டி.எம் ஜயரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ். விஜயம்-

ukஇலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று மேற்கொள்ளவுள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற கன்ஸவேட்டிவ் மற்றும் தொழில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட குழுவினர் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். இக்குழுவினர் எதிர்வரும் 26ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர். இக்காலப் பகுதியில் இந்த குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்க பிரதநிதிகள் மற்றும் எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அத்துடன் இலங்கையின் தற்போதைய மீளமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் அந்த குழு முழுமையான ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கொழும்பில் மினி சூறாவளி-

கொழும்பில் இன்றுகாலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. டி சேரம் பிளேஸ், கொழும்பு தேசிய வைத்தியசாலை, கிருலப்பனை மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மின்சார தடையும் ஏற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.