வவுனியா ஆச்சிபுரம், தரணிக்குளம், பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் வவுனியா ஆச்சிபுரம் மற்றும் தரணிக்குளம் பகுதிகளில் நேற்று இடம்பெற்றுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோருடன், ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும் மேற்படி கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இந்நடவடிக்கையின் ஒரு கட்டமாக ஆச்சிபுரம் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடனும், தரணிக்குளம் ஸ்கை பேட்ஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மற்றும் ஆச்சிபுரத்தில் வசிக்கும் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடனும் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது அவர்களின் பிரச்சினைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தரணிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவியுடனும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேற்படி கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர்களான ஜி.ரி.லிங்கநாதன் (விசு), க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் வட மாகாணசபைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கூட்டமைப்பிற்கே வாக்களித்து கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றியை உறுதிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.