Header image alt text

மாகாணசபைத் தேர்தல்: கொழும்பு வாழ் யாழ் மாவட்ட மக்களுடன் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துரையாடல்-

Anna  (12)கொழும்பில் வாழும், யாழ் மாட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பங்கேற்றார். கொழும்பு வாழ் தமிழர் நலன் விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடல் கொழும்பு தமிழ் சங்க கேட்போர் கூடத்தில், செப்ரெம்பர் 5ஆம் திகதி மாலை நடைபெற்றது.

கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் முனைவோர்கள், மூத்த பிரஜைகள், ஊடகத் துறையினர் என நூற்றுக்குக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு திரு. சித்தார்த்தன் அவர்களது கருத்துக்கனைச் செவிமடுத்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான தமது ஐயங்களை அவரிடம் கேள்விகளாக வெளிப்படுத்தியதுடன், தமிழ் கூட்டமைப்பிடம் எத்தகைய செயற்பாடுகளைத் தாம் எதிர்பார்க்கின்றோம் என்பவை தொடர்பான கருத்துக்களையும் வழங்கினர். Read more

 

அமெரிக்கத் தூதுவர் முல்லைத்தீவுக்கு விஜயம்-

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிஷெல் ஜெ.சிஸன் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்துள்ளார். அவருடன் யுஎஸ்எயிட் பணிப்பாளர் ஷெரி கார்லினும் நேற்று சென்றுள்ளார். புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட முல்லைத்தீவு பொதுச்சந்தையை அமெரிக்க தூதுவர் திறந்து வைத்துள்ளார். தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கவும் உள்ளுர் சமூகங்களை ஒன்று சேர்ப்பதற்கு வழிகோலும் வகையிலும் முல்லைத்தீவு சந்தை அமெரிக்காவினால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரழிவினாலும் பாதிக்கப்பட்ட இச்சந்தை 4,16,000 அமெரிக்க டொலர்கள் (ஏறத்தாழ 54 மில்லியன் இலங்கை ரூபா) செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இலகு வழியை ஏற்படுத்தி தருகிறது. அத்துடன் வருமானத்தை பெருக்கி கொள்ளும் வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. மற்றும் இப்பிரதேசத்தில் மீளக்குடியேறும பல்லின சமூக மக்களின் சமூக ஒன்றிணைப்பிற்கும் ஊக்குவிப்பாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்தியா இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்க நடவடிக்கை-

இந்தியா, இலங்கைக்கு 2 போர்க்கப்பல்களை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த கப்பல்கள் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு, 2017அல்லது 2018ஆம் ஆண்டில் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. கடல் எல்லையை பலப்படுத்த உதவுமாறு இலங்கை கேட்டதையடுத்து இந்த கப்பல்கள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே இந்தியாவில் உள்ள 4 தென்மாநிலங்களை தவிர ஏனைய மாநிலங்களில் இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.. தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மத்திய அரசு இலங்கை இராணுவத்திற்கு தற்போது போர்க்கப்பல்களை வழங்கவிருப்பது இராணுவ தொடர்பை பலப்படுத்தி வருவதையே காட்டுகிறது என தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் உணர்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா தலைமையகம் முன்பாக இலங்கையர் தற்கொலை-

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்துக்கு முன்பாக இலங்கையர் ஒருவர் தமக்கு தாமே தீ மூட்டி தற்கொலை செய்துக் கொண்டதாக சுவிட்சர்லாந்தின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு நேரப்படி, நேற்றுமாலை 4.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சில ஈராக்கைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் சம்பவ இடத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இலங்கையரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். அவர்களால் குறித்த இலங்கையர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.  அவரிடமிருந்து புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை சென்றபோது புலிகள் தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்துக்களாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா மனித உரிமை மாநாட்டிற்கு பிரதிநிதிகளை அனுப்புவதில்லை-அரசாங்கம்-

எதிவரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள 24வது மனித உரிமைகள் மாநாட்டிற்கு இலங்கை சார்பில் பிரதிநிதிகள் யாரையும் அனுப்பப் போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் ஊடகப் பேச்சாளர் ரொபின் பெரேரா ஊடகத்திற்கு வழங்கிய தகவலின்படி, ஜெனீவாவில் உள்ள இலங்கையின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதி இதில் பங்கேற்பார் என் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து பிரதிநிதிகளை அனுப்பும் அளவுக்கு இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்றும் ரொபின் பெரேரா குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையர்களுக்கு சிறை-

நியுசிலாந்தில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கு 17 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துவான் ப்ரவாஸ் சவால் என்ற 24வயது இளைஞருக்கும், விராஜ் வசந்த அலககோன் என்பவருக்குமே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலககோன் என்பவர் தாம் காதலித்த பெண்ணை கத்தரியால் தாக்கி கொலை செய்ததாகவும், இந்த கொலைக்கு மற்றைய இளைஞரும் துணைபுரிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொலை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு 17 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், தண்டனைக் காலத்தின் பின்னர் அவர்கள் இருவரும் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவர் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேட்பாளர்கள் சொத்துக்களை சமர்ப்பிக்கும் காலம் நிறைவு-

எதிர்வரும் வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை சமர்ப்பிப்பதற்கான திகதி நாளையுடன் நிறைவடைகிறது. தேர்தல்கள் திணைக்கள பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுவரையில் இந்த தேர்தலின் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பலர் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை சமர்ப்பித்திருப்பதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் சில சுயாதீன குழுக்கள் இன்னும் இந்த விபரங்களை வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

புலி உறுப்பினர் என ரஞ்சனி ஒப்புதல்-

அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட போதிலும், அவுஸ்திரேலிய புலனாய்வு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதியான மூன்று பிள்ளைகளின் தாயார் ரஞ்சனி, தாம் புலிகள் இயக்கத்தில் போராளியாக பயிற்சி எடுத்துக் கொண்டமையை முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். தாம் சிறுவர் போராளியாக புலிகள் அமைப்பில் இணைந்ததாகவும், 1990 ஆண்டு, இலங்கை இராணுவத்துக்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்றதாகவும் அவர் கூறியுள்ளார். 2010ல் படகுமூலம் அவர் அவுஸ்திரேலியா தப்பி சென்றுள்ளார். அவர்மீது எவ்வித குற்றவியல் வழக்குகளும் பதியப்படடிருக்கவில்லை என தெரியவருகிறது. அவருக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான வழக்கு அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நிலையில் அவரை தொடர்ந்து அங்கு தங்க வைப்பதா? அல்லது நாட்டிலிருந்து வெளியேற்றுவதா? என்பது தொடர்பில் அரசே தீர்மானிக்க வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுப்பிரமணியசுவாமி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு-

ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று இந்த சந்திப்ப இடம்பெற்றதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளிலும் காணப்படுகின்ற அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில் பேசப்பட்டதுடன்,. இரண்டு நாடுகளின் மீனவர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆராயப்பட்டதாகவும் தெரியவருகிறது.

100 பேரை பலியெடுத்த கப்பலில் அகதிகளை கடத்திச் சென்ற இலங்கையர் கைது-

அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றவேளை இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கிய படகில் அகதிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த அக்ரம் என்ற நபரே தெற்கு ஜயர்த்தா பகுதியில் வைத்து இந்தோனேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் அவுஸ்திரேலியா நோக்கி 210 பேரை படகில் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் படி இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த படகில் பயணித்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 100 பேர் வரையில் உயிரிழந்ததோடு பலர் காணாமற்போயிருந்தனர். இலங்கை, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகே இந்த வகையிலான பாரிய விபத்துக்கு முகங்கொடுத்திருந்தது.  

நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா பூரண ஆதரவு-

navneethamஇலங்கைக்கு வருகை தந்திருந்த நவிபிள்ளை முள்ளிவாய்க்காலில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்தமை தொடர்பாக ஐ.நா அலுவலகம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐ நாவின் பேச்சாளர் ரூபேட் கொல்விலி, ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தான் இதுவரை சென்ற சகல நாடுகளிலும் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதேபோல் கடந்த 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்ற பகுதியில் இறந்தவர்கள் நினைவாக அஞ்கலி செலுத்துவது தவறான செயலல்ல. மேலும் அவர் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கே தனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்த முயற்சித்தார். ஆனால் அதை இலங்கையரசு புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்ததாக முழுமையாக தவறான கருத்தை வெளியிட்டுள்ளது. ஐ.நா சபை இது தொடர்பாக மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கும். மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமானதாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பான்கீ மூனின் அறிக்கையில் இலங்கையும் உள்ளடக்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் வருடாந்த அறிக்கையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சுமத்தப்பட்ட குற்றசாட்டு தொடர்பிலான நிபுணர் அறிக்கையின் பரிந்துரைகள் பின்பற்றப்படும் என பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இலங்கையில் மனிதநேய நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என்றும் ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

sri &indiaஇலங்கைக்கான புதிய இந்தியத்தூதுவராக கடமையேற்று முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள வை.கே. சிங்ஹா, நேற்று யாழ். அரியாலை மற்றும் எழுதுமட்டுவாள் பகுதிகளில் மீள்குடியேறியுள்ள மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அரியாலைக்கு விஜயம் செய்திருந்த இந்தியத் தூதுவரை யாழ் மாவட்ட மேலதில அரசஅதிபர் ரூபினி வரதலிங்கம் வரவேற்றுள்ளார். அப்பகுதியில் இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினையும் வை.கே. சிங்ஹா பார்வையிட்டுள்ளார்.  தென்மராட்சி பிரதேசத்தில் இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டுள்ளார். அதேவேளை யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் தோப்பில் நேற்றுமாலை நடைபெற்ற தெய்வீக சுக அனுபவம் கலை நிகழ்விலும் அவர் பிரதம அதீதியாக பங்கேற்றிருந்தார்.

தேர்தல் தொடர்பில் 309 முறைப்பாடுகள் பதிவு-

வடக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 309 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது, அதிகளவிலான 78 முறைப்பாடுகள் குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் 46 முறைப்பாடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 29 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 30 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அரச வாகனங்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுதல் தொடர்பில் 47 முறைப்பாடுகளும், அரச உத்தியோகத்தர்களை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் தொடர்பில் 15 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

சீன ஆதிக்க அதிகரிப்பு தொடர்பில் இந்தியா கவலைப்பட வேண்டும்: பாரத் கர்நாட்-

indiaஇந்தியாவின் பின்வாசலாக உள்ள இலங்கையில், அதிகரித்து வரும் சீனாவின் தலையீட்டை, கவலைக்குரிய விடயமாக இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும் என கொள்கை ஆய்வு மையத்தின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான ஆய்வுப் பேராசிரியர் பாரத் கர்நாட் தெரிவித்துள்ளார். நொய்டாவில் உள்ள அமிதி பல்கலைக்கழக சட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் நேற்று நிகழ்த்திய உரையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். புவிசார் அரசியலும் இந்திய மூலாபாயமும் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், பாகிஸ்தானுடன் மாத்திரமின்றி சீனாவுடனும் கூட, இந்தியா பாதுகாப்பு ரீதியாக செற்பாட்டு நிலையில் இருக்க வேண்டும். பாகிஸ்தான், நேபாளம். பூட்டான் உள்ளிட்ட ஏனைய நாடுகளிலும் சீனத் தலையீடு அதிகமாக உள்ள நிலையில், இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை-

முன்னாள் புலி உறுப்பினர்கள் 108 பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்று வந்தனர். அவர்களில் தற்போது புனர்வாழ்வு பெற்று வருகின்ற முன்னாள் புலி உறுப்பினர்களில் 108 பேரை சமூகத்துடன் இணைக்கவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்கான நிகழ்வுகள் எதிர்வரும் 9ஆம் திகதி வவுனியா நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இறுதி யுத்தத்தின் போது 12ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் படைகளிடம் சரணடைந்தனர். அதில் 11,651பேர்  புனர்வாழ்வின் பின் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி இன்னும் 241 பேர் மட்டுமே புனர்வாழ்வு பெற்று வருகின்றனர் என புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுன்னாகம் பஸ் நிலையத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்-

2013-09-04 18.22.55யாழ். சுன்னாகம் பஸ் நிலையத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்றுமாலை 5.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. வலி.தெற்கு பிரதேசசபைத் தலைவர் பிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். Read more

குமிழமுனை, கொக்குத்தொடுவாய் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

bawan 2தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் குமிழமுனை மற்றும் கொக்குத்தொடுவாய் பிரதேசங்களில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களுடன், ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும் மேற்படி கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இதேவேளை கருநாட்டுக்கேணி பகுதிக்குச் சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் கந்தையா சிவநேசன்(பவன்), கடந்த 2006ஆம் ஆண்டுமுதல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து உரிய வகையில் மருத்துவ வசதி வழங்கப்படாத நிலையில் கடந்த 02.09.2013 அன்றுகாலை கொழும்பு மகசின் சிறைச்சாலையில் மரணமடைந்த 31வயதான பிரான்ஸிஸ் நெல்சனின் மனைவி, பிள்ளைகளைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறைகொண்டு சில முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் இலங்கைக்கு அழுத்தம்-வில்லியம் ஹக்-

இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு மனித உரிமை உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னேற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை கேள்வி எழுப்புவோம் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு ஏனைய நாடுகளின் ஆதரவுடன் மீண்டும் எழுப்பப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை கேள்வி எழுப்புவோம். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பாதுகாப்பு போன்ற விடயங்கள் குறித்தும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தூக்குத் தண்டனை அமுல்படுத்துமாறு வலியுறுத்தல்-

இலங்கையில் உடனடியாக தூக்குத் தண்டனையை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தூக்குத் தண்டனை அமுலில் இல்லாத காரணத்தினால்  நாட்டில் பயங்கரமான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.  எனவே இலங்கையில் போதைப் பொருள் விற்பனையாளர்கள், கொலையாளிகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸியில் அச்சுறுத்தலாக இருந்த இலங்கைத் தமிழர் விடுதலை-

அவுஸ்திரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்ற காரணத்தை காட்டி தடுத்துவைக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் இவர் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் கடந்த 4 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் ஏற்கனவே இவ்வாறான வழக்கு ஒன்றில் ரஞ்சனி என்ற பெண்ணும் அவரின் மூன்று குழந்தைகளும் விடுதலை செய்யப்பட்டமையை அடுத்து அந்த தீர்ப்பை பயன்படுத்தியே 26வயதான மேற்படி இலங்கையரும் வழக்கை தாக்கல் செய்திருந்தார் இந்நிலையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வேட்பாளர்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென கோரிக்கை-

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் உரிய வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி அச்சுதன் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிக்காது விடத்து, வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி வேட்பாளர்கள் சிலர் இதுவரையிலும் தமது சொத்து விபரங்களை வெளியிடவில்லை. அவ்வாறான வேட்பாளர்களுக்கு வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட மாட்டாது எனவும் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி அச்சுதன் கூறியுள்ளார்.

சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம், இதுவரை 4100 பேர் கைது-

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த, 4100 பேர் இதுவரையில் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர், கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். கடல்மார்க்கமாக சட்டவிரோதமான முறையில், வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் நோக்கில், நாட்டினை சூழ கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.

வாகரை மதுரங்குளம் கிராமத்தில் சுழல்காற்றினால் 49 வீடுகள் சேதம்-

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளம் கிராமத்தில் வீசிய சுழல்காற்றினால் 49 வீடுகள் சேதமடைந்துள்ளன. மதுரங்குளம் கிராமத்தில் நேற்றுஇரவு இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. அத்துடன் பலத்த காற்றும் வீசியுள்ளது. இதன்போது வீட்டுக் கூரைகளுக்கு இடப்பட்டிருந்த தகரங்களும் ஓடுகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டதாக மக்கள் கூறியுள்ளனர். பலத்த காற்றினால்; 06 வீடுகள் முழுமையாகவும் 43 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததாக மதுரங்குளம் கிராம அலுவலகர் சீ.கஜேந்திரன் கூறியுள்ளார்.

நாவற்காடு பகுதியில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்-

4முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளை, நாவற்காடு பொதுநோக்கு மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இலக்கம் 06இல் கூட்டமைப்பில் போட்டியிடும் கமலா அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மேற்படி தேர்தல் பரப்பரை நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர் கந்தையா சிவநேசன்(பவன்), ஊர்ப்பிரமுகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். மேற்படி கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றிய அனைவரும், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கூட்டமைப்பிற்கே வாக்களித்து கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றியை உறுதிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். இக்கூட்டத்தில் பெருமளவில் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சுழிபுரம், வலக்கம்பரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டம்-

2013-09-03 18.25.36யாழ். சுழிபுரம் வலக்கம்பரை அம்மன் கோவிலடியில் இன்றுமாலை 6மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது. பிரதேசசபைத் தலைவர் திருமதி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின், தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவிபரம்…

20130903_11331420130903_113253தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு (த.தே.கூ) வழங்கப்பட்ட மக்கள் ஆணை 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் த.தே.கூ விற்கு பிரமாண்டமான ஆணை ஒன்றை வழங்கினர். அந்த அரசியல் ஆணைக்கு அமையகூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுள்ளதோடு, அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு தேவையான ஒரு முதற்படியாக தற்போது வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்கின்றது. இம் மக்கள் ஆணையின் முக்கிய அம்சங்களை நினைவுகூர்வது இங்கு பொருத்தமானதாகும். Read more

வடக்கில் களமிறக்கப்பட்டுள்ள சுயேட்சைகளுக்கு தாம் ஏன் போட்டியிடுகின்றோம் என்பதுகூட தெரியாது-தர்மலிங்கம் சித்தார்த்தன்-

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய கட்சிகள் தென்னிலங்கை தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிடுவதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கைத் தலைமைகளின்கீழ் போட்டியிடும் கட்சிகளுக்கு அதன் தலைமைகள் எதனையும் பேசுவதற்கு அனுமதித்துள்ளதெனினும் செயற்படுவதற்கு உரிமையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு-

20130903_11325320130903_113314தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட கூட்டமைப்பு வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.