Header image alt text

பருத்தித்துறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்-

யாழ். பருத்தித்துறை மாலுசந்திப் பகுதியில் நேற்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது. பிரதேச சபைத் தலைவர் வியாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் வட மாகாணசபை யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலைகளில் மும்மொழி சங்கங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை-

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் மும்மொழி சங்கங்களை ஸ்தாபிப்பதற்கு தேசிய மொழிகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. பாடசாலைகளுக்குள் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதே இந்த செயற்றிட்டத்தினை முன்னெடுப்பதன் நோக்கமென ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க குறிப்பிட்டுள்ளார். மும்மொழி பயன்பாட்டினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பாடசாலைகளில் இந்த சங்கங்கள் முன்னெடுக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி அமைச்சர் உள்ளிட்ட கல்வித் துறைசார் பல்வேறு பிரிவினருடனும் கலந்துரையாடி, இந்த செயற்றிட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய மொழிகள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா பி.பி.சி செய்தியாளரிடம் பயங்கரவாத புலனாய்வினர் விசாரணை-

லண்டன் பி.பி.சி  தமிழோசையின் வவுனியா மாவட்ட செய்தியாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள பயங்கரவாத புலனாய்வுப்பிரிவின் தலைமையகத்தில் சுமார் 3மணிநேரம் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது. செய்தியாளர் பொ.மாணிக்கவாசகத்திற்கு வவுனியா சிறைச்சாலையிலிருந்து  வந்த தொலைபேசி அழைப்புக்கள் குறித்தே விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு செய்தியாளர் என்ற வகையில், பல ஆண்டுகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து, இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் வருவது சகஜம் என்று மாணிக்கவாசகம் விசாரணை மேற்கொண்டிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சுவிஸின் தமிழர்களை நாடுகடத்தும் திட்டம் இடைநிறுத்தம்-

சுவிஸில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கையில் அவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதன் காரணமாக நாடுகடத்தும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட இரு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், கைதான தமிழர்களின் நிலைகுறித்து அறியும் முயற்சியில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும் சுவிஸ் சமஸ்டி குடியேற்றப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுவிஸ் சமஸ்டி குடியேற்ற பணியகம் மேலும் கூறியுள்ளது.

சமுர்த்தி உத்தியோகத்தர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு-

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலைமை தொடர்பில் சமுர்த்தி பணிப்பாளருக்கு கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் அரச சேவையுடன் தொடர்புடைய பட்டதாரிகள், கல்வி சேவையுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்பது தொடர்பில் அறியக்கிடைத்ததாகவும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா ஆச்சிபுரம், தரணிக்குளம், பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள்-

TNA candidates Visu Mohan (1)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் வவுனியா ஆச்சிபுரம் மற்றும் தரணிக்குளம் பகுதிகளில் நேற்று இடம்பெற்றுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோருடன், ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும் மேற்படி கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். Read more

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 28வது நினைவுதினம் அனுஷ்டிப்பு-

DSC_0495இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2013) அனுஷ்டிக்கப்பட்டது. 28வது நினைவுதின நிகழ்வுகள் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் திரு.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் இன்றுகாலை நடைபெற்றது. இதன்போது மலராஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி.தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான சிவகுமார், கணேசவேல், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பரமேஸ்வரலிங்கம், முக்கியஸ்தர் இலகுநாதன் (புண்ணியம்), சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் குமாரவேல் ஆகியோரும், ஊர்ப் பிரமுகர்களும் உரையாற்றினர். இந்த நிகழ்வில் அமரர் தர்மலிங்கம் அவர்களின் ஆதரவாளர்களும், நண்பர்களும், பெருமளவிலான பொதுமக்களும், கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு வைத்தியர் தியாகராஜா அவர்களின் தலைமையில் மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌன அஞ்சலி இடம்பெற்றது. இந்நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன், அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அன்னாரது நினைவாக இன்று நண்பகல் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.2013-09-02 07.42.092013-09-02 07.32.412013-09-02 08.18.582013-09-02 08.52.43

 

 

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதைத் தடுப்பதற்காக வேட்பாளர்களும், வாக்காளர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர்-தர்மலிங்கம் சித்தார்த்தன்

120_content_p16_h1நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறத் தவறினால், நீண்ட காலமாக நாம் மேற்கொண்டு வருகின்ற போராட்டங்களினுடைய, அல்லது தமிழ் தேசியத்தினுடைய வலு நிச்சயமாக குறைவடையும். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு எழுந்துள்ளது. இதனை உணர்ந்துகொண்டு அவர்கள் அதனைச் செய்வார்கள் என நம்புகின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். Read more

வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்-பிரித்தானியா-

இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வு மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் பல உள்ளதாக பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்துக்களிலிருந்து இவ்விடயம் புலனாவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியபோது நவனீதம்பிள்ளை சில கருத்துக்களை வெளியிட்டியிருந்தார். இவ்விடயங்கள் குறித்து பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அலிஸ்டயர் பர்ட் கூறியுள்ளார். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்தும், சட்டம் ஒழுங்கு, தனிமனித சுதந்திரம், ஊடக சுதந்திரம், மாற்றுச் சிந்தனையாளர் ஒடுக்குமுறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியிருந்தார். இந்த அனைத்து விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட இலக்குகள் இதுவரையில் இலங்கையில் எட்டப்பட்டிருக்கவில்லை என்பது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

நவில் பிள்ளையின் கருத்துக்கள் தொடர்பில் கரிசனை கொள்ளுமாறு வலியுறுத்தல்-

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பி;;ல் வெளியிட்டுள்ள கருத்துக்களை ஐக்கிய நாடுகள் சபையும் பொதுநலவாய நாடுகளும் கரிசனையில் கொள்ளவேண்டும் என அனைத்துலக மன்னிப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்துலக மன்னிப்பு சபையின் ஆசிய பிராந்திய உதவி பணிப்பாளர் பொலி ட்ரஸ்கோட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கை சென்றிருந்த நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமைகள் குறித்து விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் குறித்த கருத்துக்களை ஐ.நா சபையும் பொதுநலவாய நாடுகள் அமைப்பும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ட்ரஸ்கோட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இணுவில், கொக்குவில் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்-

யாழ். இணுவில் பகுதியில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கொன்று இடம்பெற்றுள்ளது. இணுவில் இளந்தாரி கோயிலடியில் இந்த தேர்தல் கருத்தரங்கு இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன், வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உதயகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். Read more

இலங்கையில் எதேச்சாதிகாரப் போக்கு அதிகரிப்பு-நவநீதம்பிள்ளை-

இலங்கையில் எதேச்சாதிகாரப் போக்கு அதிகரித்து வருவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார். இலங்கையில் உண்மையைக் கண்டறியும் பயணத்தை மேற்கொண்ட நவநீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் நேற்றுக்காலை செய்தியாளர்களிடம் பேசியபோதே இவ்வாறு கூறியுள்ளார். Read more

வடமாகாண தேர்தல் கண்காணிப்பு-

தேர்தல்கள் திணைக்களத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று வட மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் தேர்தலில், வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அவர்களின் இந்த விஜயம் அமைந்துள்ளது.இந்நிலையில், ஏற்கனவே தெற்காசிய தேர்தல்கள் அதிகாரிகள் ஒன்றியம், தேர்தலை கண்காணிப்பதற்கான குழுவொன்றை அனுப்ப தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுதவிர, இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, நேப்பாளம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வட மாகாணத்தின் நிலைமைகளை உடனுக்குடன் அறியும் நோக்கில், தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வாரந்தர அறிக்கையினை கோர தீர்மானித்துள்ளார். இந்த பணிப்புரைக்கு அமைய தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் வடக்கு மாகாணத்திற்கு விஜயம்செய்து, அங்குள்ள நிலைமைகளையும், கிடைக்கபெறும் தேர்தல்கள தொடர்பான முறைப்பாடுகள் குறித்தும் வாரந்தரம் அறிக்கையினை சமர்ப்பிப்பரென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா சபைக்குள் புலிகள் இல்லை-நவநீதம்பிள்ளை-

இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை பக்கச் சார்பாக செயற்படவில்லை. அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபைக்குள் புலிகளும் இல்லை. இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாடுகள் மற்றும் பொறுப்புடமைகளின் பிரகாரமே ஐக்கிய நாடுகள் சபையும் ஐ.நா. மனித உரிமை பேரவையும் செயற்படுகின்றது என மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐ.நா. அலுவலகத்தில் நேற்றுஇடம்பெற்ற செய்தியாளார் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஐ.நா. இலங்கை விவகாரங்களில் பக்கச்சார்பாக செயற்படுவதாகவோ தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை நிறைவேற்றுவதாகவோ கூறுகின்றமை அடிப்படையற்ற தன்மையாகும். ஏனெனில் 60 நாடுகளுக்கு மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளேன். அதேபோன்று மனித உரிமைகள் தொடர்பிலான பூகோள மீளாய்வு கூட்டத்தொடரில் உலகத்தின் அனைத்து நாடுகளினதும் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து ஆரயப்பட்டு அறிக்கை வெளியிடப்படுகிறது. இலங்கை தொடர்பில் மாத்திரம் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. புலிகளின் போர்க்குற்றங்கள் குறித்தும் விசாரணை அவசியம் என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.