Header image alt text

பனிச்சங்கேணி பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு-

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலத்தை திறந்து வைத்துள்ளார். மட்டக்களப்பு-திருக்கொண்டியாமடு – திருகோணமலை வீதியில் மஹிந்த சிந்தனையின் துரிதகதி வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடை உதவியின் கீழ் 1060 மில்லியன் ரூபாய் செலவில் இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்தமதப் பெரியார்களும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்க சிப்லி பாரூக் மற்றும் ஜப்பான் நாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காரைதீவில் மனித எச்சங்கள் மீட்பு-

அம்பாறையின் காரைதீவு, 8ஆம் பிரிவில் கடற்கரையையண்டிய வளவொன்றிலிருந்து இன்றுகாலை குப்பையைப் புதைப்பதற்கு குழி வெட்டியபோது மனித எச்சங்கள் வெளிப்பட்டுள்ளன. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிபேரலையின் பின்னர்; கரையொதுங்கிய பெரும்பாலான சடலங்கள் பரவலாக இப்பகுதிகளில் புதைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது சுனாமியின்போது பலியான உடலாயிருக்கலாமென கருதப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.