இந்திய – இலங்கை அமைச்சர்கள் நாளை பேச்சு-
மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய – இலங்கை அமைச்சர்கள் டில்லியில் நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தியா சார்பில் மத்திய விவசாய அமைச்சர் சரத்பவாரும், இலங்கை சார்பில் மீன் வளத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். மன்னார் வளைகுடாவில் மீன் பிடிப்பதில் நிலவும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருவரும் கலந்துரையாடவுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சென்னையில் எதிர்வரும் 20ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்றுகாலை டில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இதேவேளை, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 20 இலங்கை மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆயினும், அவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை எனவும், விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை நாட்டிற்கு அழைத்துவருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் ஏ.எஸ் கான் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்கள் நேற்று தம்மை சந்தித்து, மகஜரொன்றை கையளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்கள் நேற்று யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விடுதலை செய்யப்பட்டதாக யாழ். இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.