மோடி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்

Sithar-ploteஇலங்கை ஜனாதிபதியுடனான முதலாவது சந்திப்பிலேயே இலங்கைத் தமிழரின் விவகாரம் தொடர்பில் மோடி பேசியிருப்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு கிடைத்த நல்லதொரு சமிக்ஞையாக தோன்றும் அதேவேளை, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கக்கூடிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா, தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சக்தி என்பதை கடந்த தேர்தல் மூலம் நிரூபித்துள்ளதுடன், அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் கூடுதல் அக்கறை காட்டிவரும் சூழ்நிலையில், மோடியுடன் ஜெயலலிதா சந்திக்கும் வேளையில் இலங்கைத் தமிழரின் பிரச்சினை முக்கிய விடயமாக பேசப்படும் எனவும் இதுவே இன்று தமிழ்நாட்டினதும் புதிய மோடி அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு சிறிதுகாலம் விஜயம் செய்து அங்குள்ள அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்புக்களை நடத்தி, சமகால அரசியல் நிலைமை பற்றி அறிந்து நாடு திரும்பிய சித்தார்த்தன் அவர்கள் ஞாயிறு தினக்குரலுக்கு (01.06.20014) வழங்கிய பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவருடனான பேட்டி வருமாறு: (ந.லெப்ரின்ராஜ்)

கேள்வி: உங்களுடைய இந்திய விஜயம் தொடர்பில்….

பதில்: நான் இந்தியாவுக்கு சென்றநேரம் அங்கு தேர்தல் பரபரப்புகள் நடந்து கொண்டிருந்தபடியால் என்னால் அரசியல் முக்கியஸ்தர்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது. இருந்தபோதும், பாரதீய ஜனாதக் கட்சியுடன் தொடர்புடையவர்களை சந்தித்து பேசக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

அந்தப் பேச்சுவார்த்தைகளில் புதிய அரசாங்கம் ஆசிய நாடுகளுடன் ஒற்றுமையாகச் செல்லும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ள அதேவேளை, சீனாவுடன் தங்களின் ஒற்றுமையை பலப்படுத்துவதிலும் அக்கறையாக இருப்பதாக கூறப்பட்டது. மேலும், இலங்கையுடன் ஒற்றுமையாகச் செல்ல வேண்டுமானால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும் அவர்கள் அக்கறையாக இருப்பதாக கூறப்பட்டது. இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான மோடியின் முதல் சந்திப்பிலேயே தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

அதாவது, 13ஐத் தாண்டி செல்லுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு கூறப்பட்டிருக்கிறது. அதேபோன்று புதிய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சுஷ்மா ஸ்வராஜூம இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வேளையில், 13பிளஸ் பற்றி கூறியிருந்தார். ஆகவே, இந்தியாவின் புதிய அரசாங்கத்தினூடாக தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வரும் என்பதில் புதியதொரு நம்பிக்கை பிறந்திருக்கிறது.

இந்தியாவை இவ்வளவு காலமும் ஆட்சிசெய்த தலைவர்களுள் மோடி மிகவும் வித்தியாசமானதொரு தலைவர் என்ற குரல் இந்தியாவில் ஓங்கி ஒலிக்கிறது. அது உண்மை என்பதை அவருடைய பதவிப் பிரமாண நிகழ்வு உலகுக்கு எடுத்துக்காட்டியது.

மோடி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய முதல் சந்திப்பிலேயே தமிழர் விவகாரத்தை எடுத்துப் பேசியிருப்பதால் நிச்சயமாக அவ் எமது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வை பெற்றுக்கொடுப்பார் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

கேள்வி: தமிழர் விவகாரத்தில மோடி அரசுடன் சேர்ந்து தமிழ்நாட்டுத் தலைவர்கள் பணியாற்றுவதற்கான அல்லது அழுத்தத்தை கொடுக்கும் சூழ்நிலை தமிழ் நாட்டில் இருக்கிறதா?

பதில்: தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலிதாவுக்கும் மோடிக்கும் இடையில் நல்லதொரு நட்பு தேர்தலுக்கு முன்னரிலிருந்தே இருந்து வருகிறது.

ஆகவே, இந்த நட்பு ரீதியான தொடர்பை எமது பிரச்சினை விடயத்தில் ஜெயலலிதா பாவிப்பார் என்று நாம் நம்புகிறோம். அண்மைக்காலமாக தமிழரின் பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் ஜெயலலிதா பெரியதொரு ஆர்வத்தைக் காட்டி வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதில் முமம்முரமாக அவர் ஈடுபட்டு வருகிறார்.

ஜெயலலிதாவுடன் சம்பந்தப்பட்டவர்களுடனும் என்னுடைய இந்திய விஜயத்தின்போது பேசக்கூடியதாக இருந்தது. அவர்களும், இலங்கை; தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் மிகவும் அக்கறையுடன் ஜெயலலிதா உள்ளார் எனத் தெரிவித்திருந்தனர்.

ஆகவே, மோடியுடன் ஜெயலலிதா சந்திக்கும் வேளையில் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை முக்கிய விடயமாக பேசப்படும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

மேலும், தமிழ்நாட்டில் தான் ஒரு மிகப்பெரிய சக்தி என்பதையும் தன்னை ஒதுக்கிவிட முடியாது என்பதையும் இம்முறைத் தேர்தலில் நிரூபித்துள்ளார் ஜெயலலிதா. ஆகவே, அவருக்கு கிடைத்துள்ள தமிழ் நாட்டின் செல்வாக்கு இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல்தீர்வு விடயத்தில் பெரியதொரு பங்கை வகிக்கும்.

கேள்வி: பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம்தான் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் அரசு தீவிரமாக இருக்கிறது. மோடியுடனான சந்திப்பின் பின்னரும் அரசு இதனை கூறியுள்ளது. இதுபற்றி உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: கடந்த மூன்று வருடகாலமாக இதைத்தான் அரசாங்கம் கூறிக்கொண்டு வருகிறது. இவ்வாறு கூறுவதன்மூலம் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கெல்லாம் தாம் இடம் கொடுக்கவில்லை என்பதை சிங்கள மக்களுக்கு காட்டுவதற்கான அரசின் தந்திரோபாய நடவடிக்கை என்றே நாம் பார்க்கிறோம்.

எந்தவொரு சர்வதேசத்துக்கும் தாம் அடிபணியாத சிங்கள தேசியக் கட்சி என்பதை சிங்கள-பௌத்த மக்களுக்கு காட்டி அவர்களிடமிருந்து வரும் அழுத்தங்களை தவிர்த்து தொடர்ந்தும், ஆட்சிக் கட்டிலிலிருக்கும் ஒரு தந்திரோபாய நடவடிக்கையே சர்வதேசத்தின் அழுத்தங்கள் வரும்போது பாராளுமன்ற தெரிவுக்குழு என்ற விடயத்தை எடுப்பதற்கான காரணம்.

இருந்தபோதும், மோடியின் அரசாங்கம் ஒரு புதிய அரசாங்கம். அதனை உடனடியாக பகைத்துக் கொள்ளும் விதத்திலான நடவடிக்கைகளை இலங்கை அரசு செய்யாது என்றே நான் நம்புகிறேன். அவ்வாறு பகைத்துக் கொள்ளவும் இயலாது.

பதவிப் பிரமாண நிகழ்வில் மோடி அரசு ஒரு விடயத்தை காட்டியிருக்கிறது. அதாவது, சார்க் நாடுகளின் வழிகாட்டி இந்தியாதான் என்பதை உலகுக்கு காட்டியிருந்தது. மேலும், முதல் சந்திப்பிலேயே இலங்கை ஜனாதிபதிக்கு கூறப்பட்டிருக்கும் 13இற்கு அப்பால் என்ற விடயம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை நல்லதொரு சமிக்ஞை.

மேலும், இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு ஒரு சிநேகபூர்வமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. இதுவும் நல்லதொரு விடயம் தான். இவ்வாறான சிநேகபூர்வமான சந்திப்பின் மூலம் கூறப்பட்டிருக்கும் விடயத்தை இலங்கை அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாததொரு சூழலையும் ஏற்படுத்தலாம். ஆகவே, மோடி – இலங்கை ஜனாதிபதி ஆகியோரின் முதல் சந்திப்பு தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு ஆரோக்கியமான சந்திப்பாகவே அமைந்துள்ளது.

கேள்வி: மோடியின் பதவிப் பிரமாண வைபவத்துக்கு இலங்கை ஜனாதிபதியை அழைத்ததற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்ததுடன், பல போராட்டங்களும் இடம்பெற்றன. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக மட்டுமல்ல, பாகிஸ்தான் பிரதமரை அழைத்ததற்காகவும் இந்தியாவின் வடக்கிலும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. என்னைப் பொறுத்தவரை மோடி அரசு சார்க் நாடுகளுக்கு இந்தியாதான் வழிகாட்டி என்பதை நிரூபிப்பதற்கு விரும்பியிருந்ததால் தான் சார்க் நாட்டுத் தலைவர்களை அழைத்திருந்தது. அதனால் தான் அவர்கள் மாநிலங்களின் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்பதே என்னுடைய எண்ணப்பாடு.

கேள்வி: இந்தியாவின் புதிய அரசுடன் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: இந்தியாவின் புதிய அரசாங்க உறுப்பினர்களுடன் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு பல காலமாகவே நல்லதொரு உறவுமுறை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆகவே, அந்த உறவை மேலும் வலுப்படுத்தி தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் மோடி அரசாங்கம் ஆகக் கூடுதலான அக்கறையும் கவனமும் எடுக்கக்கூடிய வகையிலான நிலைமை ஒன்றை உருவாக்க வேண்டியது கூட்டமைப்பின் கடமை. அதனை படிப்படியாகச் செய்வோம்.