வட கிழக்கு ஆளுநர்கள் அதிகாரங்களை தமக்கேற்றவகையில் பயன்படுத்துகிறார்கள்-ஹக்கீம்-

Hekeemவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள்ள ஆளுநர்கள் அதிகாரங்களை தமக்கேற்றவகையில் பயன்படுத்துவதாக  நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 13 ஆவது திருத்தத்தை மீண்டும் திருத்தி அதிலுள்ள அதிகாரங்களை குறைக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு முதலமைச்சர்கள் பிரச்சினையல்ல ஆனால் ஆளுநர்களுக்கே பிரச்சனை உள்ளது. தெற்கில் உள்ள ஆளுநர்களுக்கு முதலமைச்சர்களுடன் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் இந்த முரண்பாடு தொடர்ந்தும் காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு ஆளுநர்கள் தமக்குள்ள அதிகாரங்களை தமக்கு ஏற்றவாறு  பயன்படுத்தும் நிலையே காணப்படுகின்றது.  இதனால் இந்த பிரச்சனையை தீர்ப்பதில் சிக்கல் காணப்படுகின்றது. ஒய்வுப் பெற்ற இராணுவ அதிகாரிகளையே ஆளுநர்களாக நியமிக்கின்றனர். தெற்கில் அந்த நிலை குறைவாகும் என்றார் அவர்.

கட்டுநாயக்க – கராச்சி விமான சேவை இரத்து-

hijack-plane-in-attackகட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்குச் செல்லும், இன்றைய விமானப் போக்குவரத்து இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தாக்குதலையடுது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி இன்று பிற்பகல் பயணிக்கவிருந்த விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமான சேவை கூறுகின்றது. விமான நிலையத்தில் பாதுகாப்பு நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தபின்பே கராச்சி வரையான விமான போக்குவரத்து இடம்பெறும் என இலங்கை விமான சேவை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் காராச்சி விமான நிலையத் தாக்குதலை தாம்தான் நடத்தியதாக பாகிஸ்தான் தலிபான் பிரிவினர் அறிவித்துள்ளனர். பாகிஸ்தானின் கிராமங்கள்மீதான குண்டுத் தாக்குதல்களில் அப்பாவிக் கிராமவாசிகள் பலியாவதற்கு பழிக்குப் பழி வாங்க நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்பதை பாகிஸ்தான் அரசுக்குச் சொல்லவே இந்தத் தாக்குதலை நடத்தினோம் என்று தலிபான் அமைப்பு குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை கராச்சி விமானநிலையத் தாக்குதலையடுத்து, சென்னை விமானநிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  

சார்க் நாட்டு தலைவர்களுடன் கூடுதல் ஒத்துழைப்பு பேணப்படும்: பிரணாப் முகர்ஜி-

Moodyசார்க் நாடுகளின் தலைவர்களுடனான ஒத்துழைப்பு தொடர்ந்து பேணப்படும் என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். அத்துடன், தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். சார்க் நாடுகளின் தலைவர்களுடன் கூடுதல் ஒத்துழைப்பு பேணப்படும். அழைப்புவிடுத்த குறுகிய காலத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்திருந்த சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அண்டை நாடுகளுடன் நல்லுறவை தொடர விரும்பும் அதே நேரத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை சகித்துக்கொள்ள முடியாது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா சுகாதார ஊழியர்கள் உண்ணாவிரதம்-

வவுனியா நகரசபையில் பணியாற்றிய தற்காலிக சுகாதார ஊழியர்கள் ஐவர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கடந்த 2001ஆம் ஆண்டு மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் நகரசபையில் சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறையாக இருந்தபோது தற்காலிக நியமனங்களில் பணியாற்றியவர்களின் பணிக்காலம் நிறைவடைந்துள்ளதாக நகரசபை செயலரினால் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமக்கு நிரந்த நியமனத்தை வழங்குமாறு கோரி இவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். 7 சுகாதார ஊழியர்களுக்கு இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்படாத போதிலும் இருவர் தொழில் வாய்ப்பின்மை மற்றும் கடன் சுமை காரணமாக வவுனியாவை விட்டு வெளியேறியுள்ளமையால் அவர்கள் இதில் பங்கேற்கவில்லை என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வவுனியா கிளை இணைப்பாளர் ஆர். சித்திரன் தெரிவித்துள்ளார். பல்வேறு முயற்சிகளினால் பலன் கிடைக்காமையால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர் இதற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் அனைத்து சுகாதார ஊழியர்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபடவிருப்பதாக கூறினார்.

தமிழக மீனவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பம்-

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்திய தூதரக அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்புக்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் இப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்திய அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பிரதேசத்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காணாமல்போன இலங்கை மகன் சென்னையில் மீட்பு-

இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சென்னை வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது 12வயது மகனை அவரது தந்தை பொலிசாரின் உதவியுடன் மீட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பருத்தித்துறையை சேர்ந்த சிவபாலன் (44) என்பவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். மனைவி இறந்து விட்டார். இந்நிலையில், தனது 12 வயது மகனை மீட்டுத் தரும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 23ம்திகதி புகார் அளித்தார். இந்த நடவடிக்கையின்போது பொலிசார் இலங்கை தமிழர் அதிகமாக வாழும் பல்வேறு பகுதிகளில் பவித்ரன் எனும் குறித்த சிறுவனைத் தேடினர். இறுதியில், முகப்பேரில் ஜெயலட்சுமி என்பவர் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவர் பொலிசாரிடம் ஒரு முகவரி கொடுத்து விட்டு மற்றொரு முகவரியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பவித்ரன் தனது மகன் என்று கூறி அதே பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சேர்த்துள்ளார். தற்போது, அவன் 7ம் வகுப்பு படித்து வருகிறான். இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து பொலிஸார் பவித்ரனை மீட்டு சிவபாலனிடம் ஒப்படைத்தனர்.

அரசு பக்கம் தாவ மாட்டோமென ரவி, பாலித்த தெரிவிப்பு-

தாம் அரசாங்க கட்சியில் இணைவது தொடர்பில் எந்தவொரு ஏற்பாடும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்க கட்சியுடன் இணையப் போவதாக வெளியான தகவல் பற்றி விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அரசாங்கத்துடன் இணையப்போவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் அத தெரண ரவி கருணாநாயக கூறுகையில், அரசாங்கத்துடன் இணைய வேண்டிய எந்தவெரு தேவையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

வாகரையில் கைக்குண்டு மீட்பு-

மட்டக்களப்பு வாகரை பிரதேச சபைக்குட்பட்ட புச்சாக்கேணியில் அமைந்துள்ள பலநோக்கு மண்டபத்திலிருந்து கைக்குண்டு ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. நடமாடும் சேவை நிகழ்வொன்று குறித்த கட்டத்தில் இன்று நடத்தப்படவிருந்த நிலையிலேயே இந்த கைக்குண்டை  மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று துப்பரவு நடவடிக்கைகள் குறித்த கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட போதே குறித்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த கைக்குண்டை பொலிஸார் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பரந்தன் சந்தியில் விபத்து; இரு இளைஞர்கள் பலி-

கிளிநொச்சி பரந்தன் சந்தியில் இன்றையதினம் முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிந்துள்ளனர். ட்ரக் ஒன்றும் மோட்டார் சைக்களில் ஒன்றும் மோதியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.