நாட்டில் மீண்டுமொரு சிவில் யுத்தத்திற்கு இடமளிக்ககக் கூடாது- முன்னாள் ஜனாதிபதி

chandrikaகடந்த சில தினங்களாக நாட்டில் காணப்பட்ட நிலைமைகள் தொடர்பில் கவலையடைவதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். உயிர்ச்சேதங்கள், மக்கள் இடம்பெயர்ந்தமை மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் தமக்கு கவலையை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 18 மாதங்களில் சட்ட அமுலாக்கம் வீழ்ச்சியடைந்தமை, குரோதங்கள் ஏற்படுத்தப்பட்டமை மற்றும் சட்டங்கள் மீறப்பட்டமை தமது வருத்தத்திற்கான காரணமெனவும் முன்னாள் ஜனாதிபதி தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இன வன்செயலுடன் அப்போதைய அரசாங்கம் கையாண்ட செயற்பாடுகள் காரணமாக நாடு 25 ஆண்டுகால கொடூர யுத்தத்தை எதிர்கொண்டது. அந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர தற்போதைய அரசு தீர்க்கமான நடவடிக்கை முன்னெடுத்தது.  இந்நிலையில் அண்மைய வன்முறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக மன்னிப்பின்றி சட்டத்தை செயற்படுத்துவதன் தேவையை, அரசுகு சுட்டிக்காட்டுமாறு, நாட்டின் தலைவர்களிடமும், பொதுமக்களிடமும் முன்னாள் ஜனாதிபதி கேட்டுள்ளார். அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையை மீண்டும் சிவில் யுத்தம் ஒன்றுக்குள் தள்ளிவிட, அடிப்படைவாத சிறு குழுக்களுக்கு இடமளிக்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருக்கள்மட மனித புதைகுழியை அகழ்வதற்கு அனுமதி-

mannar puthaikuli (1)மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் உள்ளதாக கூறப்படும் மனித புதைகுழியை அகழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய ஆடி மாதம் 01ஆம் திகதி தொடக்கம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் காத்தான்குடி பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடத்தி செல்லப்பட்டு புலிகளால் கொல்லப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் கடற்கரை ஓரமாக புதைக்கப்பட்டிருப்பதாக ஒருவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியதை அடுத்து குறித்த இடத்தை அகழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்கமைய 2014 ஆடி மாதம் முதலாம் திகதி குருக்கள்மடம் பகுதியிலுள்ள குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் இவ்விடயம் தொடர்பில் இப்பகுதியில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவில் விசாரணைகளை நடத்த ஏற்பாடு-

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அடுத்த மாதம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. இதன்படி அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இனப்பிரச்சினை தொடர்பான பொதுமக்கள் யோசனை

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பொதுமக்களின் யோசனைகள் கிடைத்த வண்ணமுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரையில் சுமார் 200 மேற்பட்ட யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்தும் யோசனைகள் வந்திருப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உருப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக பொதுமக்களின் யோசனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிள்ளமை இங்கு குறி;ப்பிடத்தக்கது.

ஜம் இய்யத்துல் உலமா, பாதுகாப்பு செயலர் சந்திப்பு-

ஜம் இய்யத்துல் உலமா அமைப்பு உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின்போது சமயங்களுக்கு இடையிலான ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இராணுவு ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

யாழில் இளைஞனின் சடலம் மீட்பு-

யாழ். பருத்தித்துறை தும்பளை கிழக்கு (மூர்க்கம்) கடற்கரையிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் தும்பளையைச் சேர்ந்த முருகேசுப்பிள்ளை நிமல்ராஜ் (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதிகாலை மீன்பிடிக்குச் சென்றவர்கள் கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியிருப்பதை அவதானித்தவுடன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போலி கடவுச் சீட்டுடன் ஆறு இலங்கையர்கள் கைது-

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 06 இலங்கையர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச் சீட்டுகளை தயாரித்தவரை சந்திப்பதற்காக காத்திருந்தபோது, இவர்கள் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் போலி கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, மூன்று கோடி ரூபா வழங்கியுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அலுக்கோசு பதவிக்கான புதிய பெயர்கள் தயார்-

alukosuஅலுக்கோசு பதவியின் புதிய பெயர்களுக்கான அர்த்தங்களை அறிந்ததன் பின்னர் அலுக்கோசு என்ற பெயரை மாற்ற மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அலுக்கோசு பதவி பெயரை மாற்றி வேறு பெயரை வைப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி புதிய பெயர்களை பரிந்துரை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய 180 பெயர்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் 8 பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். இந்த பெயர்களின் அர்த்தங்களை அறிவதற்காக மொழி வல்லுநர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் அனுமதி கிடைத்தபின் புதிய பெயர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.