பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்-

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மக்கள் விடுதலை முன்னணி இன்று முற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. பாலஸ்தீன்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களுக்கும்  அதற்கு அமெரிக்கா துணைபுரிவதற்கும்  எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அப்பாவி பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் அடுக்கடி தாக்குதல் மேற்கொண்டு பல உயிர்களை காவு கொண்டுள்ளதுடன் மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் விடுதலை முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் விஷித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அமெரிக்க அரசாங்கம் உதவி புரிவதாகவும் இதற்கு உலக நாடுகள் தமது எதிர்பினை தெரிவித்துவரும் நிலையில் இலங்கை அரசாங்கம் எவ்வித கண்டணங்களை யும் வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியின் கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று முற்பகல் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

தேர்தல் சட்ட மீறல் குறித்து 9 முறைப்பாடுகள் பதிவு-

ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில் தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறும் வகையில், வாகன தொடரணிகள் மற்றும் பல்வேறு பிரசார நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை குறித்து 9 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறியுள்ளார். வெலிமடை, தியத்தலாவை, பண்டாரவளை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளிலேயே தேர்தல் சட்டமீறல்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தமக்கு இரு சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தில் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர கூறியுள்ளார். மொனராகலை மற்றும் பதுளை பிரதேசங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோரின் குடும்பத்தார் குறித்த அறிக்கை-ஐ.சி.ஆர்.சி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரது குடும்பத்தினரின் தேவைகள் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிக்கை ஒன்றை தயாரிக்கவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த பணிகள் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தும் செயற்பாட்டு குழுவின் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நல்லிணக்க பரிந்துரைகளை அமுலாக்க வேண்டிய இடங்களை அடையாளப்படுத்துவதற்கு ஏதுவாக இந்த அறிக்கை தயாரிக்கப்படுவதா

இலங்கை அதிகாரிக்கு எதிராக தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்-

தமிழ்நாட்டில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்திற்கு முன்னால் நேற்றையதினம் சட்டத்தரணிகள் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது. இந்த நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பங்கு பற்றியிருந்தார். இதற்கு எதிராகவே இந்த ஆர்பு;பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுப் படுத்தும் வகையில் இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளத்தில் வெளியாகி இருந்த ஆக்கம் ஒன்றுக்கு எதிரான கோசங்கள் எழுப்பபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவுக்கு கண்டனம்-

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள இலங்கை அகதிகள் 157 பேரையும் உயிர்காப்பு படகுகளின் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா மேற்கொண்ட முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மாதம் பிடிபட்ட குறித்த அகதிகளை, உடனடியாக உயர்காப்பு படகுகளின்மூலம் திருப்பியனுப்ப அவுஸ்திரேலிய அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். இதற்காக அங்கு அகதிகளாக சென்றிருந்த 107 வயதுவந்த அகதிகளில் 15பேரை தெரிவுசெய்து, படகினை செலுத்துவதற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசு இவ்வாறு செய்ய முற்பட்டதன்மூலம், குறித்த இலங்கை அகதிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்தாக, அவுஸ்திரேலிய மனித உரிமைகள் மத்திய நிலைய நிறைவேற்று பணிப்பாளர் ஹியூஜ் டி க்ரெஸ்டர் தெரிவித்துள்ளார்.

சிங்கள அகதிகள் உணவுத் தவிர்ப்பில்-

அவுஸ்திரேலியாவின் கர்டீன் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிங்கள அகதிகள் சிலர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள 21 சிங்கள அகதிகளில் 11 பேர் இந்த போராட்டத்தை நடத்தி வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாங்கள் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. விசாரணைகளை மேற்கொண்டு தங்களுக்கான அகதி அந்தஸ்த்தை வழங்கி குடியேற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணிகளில் இருப்பவர்களை வெளியேற்ற வருகிறது புதிய சட்டம்-

பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டு தமது காணிகளை இழந்தவர்கள் மீள அதை பெற்றுக்கொள்ள வசதியாக காணி ஆட்சியுரிமைச் சட்டமூலத் திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமது சொந்தக் காணிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளவர்கள் தமது காணியில் தற்போது வேறு யாராவது குடியிருந்தால், அவர்களை வெளியேற்றி மீள தமது காணி உரிமையைப் பெற்றுக்கொள்ள இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கும் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் விளக்கியுள்ளார். எனினும் இதற்கான காலம் ஒரு வருடத்திற்கு வரையறுக்கப்பட்டுள்ளதால். இதில் சம்பந்தப்பட்ட மக்கள் தமது கவனத்தை அதிகரிக்கச் செய்வதற்காக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை நீதியமைச்சு மேற்கொள்ளவுள்ளது. ஒருவருட காலஅவகாசமே உள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் தமது காணி உரிமைகள் தொடர்பில் விரைவாக நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். தற்போதுள்ள ஆட்சியுரிமைச் சட்டத்தின் கீழ் 10 வருடங்கள் ஒருவர் ஒரு காணியில் இருந்தால், அதற்கு உரிமைகோர முடியும். யுத்தம் காரணமாக சொந்த இடங்களில் இருந்த பலர் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களின் காணிகளில் வேறு நபர்கள் வசித்து வருவதால் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இது தொடர்பில் நல்லிணக்க ஆணைக் குழுவாலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே காணி உரிமையாளர்களுக்கு அசாதாரணம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஆட்சியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர சட்ட ஆணைக்குழு 2009 ஆம் ஆண்டே சிபாரிசு செய்திருந்தது. இதற்கமைய ஆட்சியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.