மஹநுவர ஆயுதக்கப்பல் சட்டரீதியானது-பாதுகாப்பு செயலர்-
காலியில் நங்கூரமிட்டிருந்த மஹநுவர என்ற கப்பலில் உள்ள ஆயுதக்களஞ்சியம் சட்ட ரீதியானதே என பாதுகாப்புச் செயலாளர் யூ.டி பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். காலியில் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் கப்பலில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கிகளும் தோட்டாக்களும் மீட்கப்பட்டிருந்தன. எனினும் இந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 3000ற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் லட்சக் கணக்கான தோட்டாக்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பாதுகாப்புச் செயலர் கூறியுள்ளார். காலி துறைமுகத்திலிருந்து 7 கடல்மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த இக்கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாக்கும் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது. இக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பற்றிய விபரங்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஆயுதக் களஞ்சியம் அடங்கிய கப்பல் சட்டவிரோதமான முறையில் நங்கூரமிடப்பட்டிருக்கவில்லை என செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைப்பு-
2014ம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 2ஆல் குறைக்கப்படவுள்ளது. இந்த எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்துக்கும் வழங்கவிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து 9 பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர். 2014ம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலின்படி, யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகும் எம்.பிக்களின் எண்ணிக்கை 7ஆக குறைவடையும். நுவரெலியா மாவட்டத்தில் கடந்த தேர்தலின்போது 7 எம்.பிக்கள் தெரிவான நிலையில், புதிய பெயர் பட்டியலின்படி இந்த எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் இரத்தினபுரியில் இருந்து தெரிவாகும் எம்.பிக்களது எண்ணிக்கை 10ல் இருந்து 11ஆக அதிகரிக்கவுள்ளது. எனினும் ஏனைய மாவட்டங்களில் புதிய சீர்த்தித்தத்தின்படி எம்.பிக்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. இந்த வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வருடம் 2014ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படும். இதன்படி மாவட்ட ரீதியான மக்கள் தொகையின் அடிப்படையில் இந்த ஆசன சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என தேர்;தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடிவேல் சுரேஷின் இணைப்பாளர் பயன்படுத்திய வாகனம் மீட்பு-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான கெப் ரக வாகனம் ஒன்று பசறை லுனுகல மடூல்சீமை கொகாகலவத்தை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மடூல்சீமை காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த வாகனம் மீட்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஊவா மாகாண சபை உறுப்பினர் வடிவேல் சுரேஷின் இணைப்பாளர் ஒருவரினால் பயன்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது .பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த இணைப்பாளரும், வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமல்போன வாகனங்கள் குறித்து தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழில் கத்திக் குத்துக்கு இலக்காகி கணவன் பலி, மனைவி படுகாயம்-
யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 11.30 அளவில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று வீட்டினுள் அத்துமீறி நுழைந்து கணவன் மனைவி மீது கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் காட்டுப்புலத்தை சேர்ந்த ம.சுஜந்தன் (வயது 28) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அவருடைய மனைவியான சு.தனுசியா (வயது 25) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையக மக்களுக்கு சொந்தக் காணியில் வீடு நிர்மாணிக்க நடவடிக்கை-
மலையக மக்களுக்கு சொந்த காணிகளில் வீடுகளை நிர்மாணித்து கொடுக்கவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் தெரிவித்தார். பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் பத்திரமுல்லையிலுள்ள தனது அமைச்சில் இன்றுகாலை தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இடமற்று தமக்கென முகவரியற்று வாழ்ந்து வரும் மலையக சமுதாயம், தமக்கு என்று ஒரு இடமுண்டு நிறமுண்டு எங்களுக்கும் இந்த நாட்டில் உரிமையுண்டு என்ற செல்லக் கூடிய வகையில், அவர்களுக்கு சொந்த காணிகளில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளோம். இதற்கமைய மலையக மக்களுக்கான வீடுகளை 100 நாட்களுக்குள் கட்டிக்கொடுக்க தீர்மானித்துள்ளோம். இதற்கு தோட்ட நிர்வாகங்கள், தோட்ட முகாமைத்துவங்கள், தொழிற்சங்க பிரதிநிகள். தொழிற்சங்க தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் கல்வி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள மலையகத்தை பிரதிநித்துவப் படுத்தும் ஏனைய இரு அமைச்சர்களுடனும் ஏனைய அமைச்சர்களுடனும் இணைந்து ஒன்றுமையுடன் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அனுராத ஜயரத்ன பிணையில் விடுதலை-
நடைபெற்று முடிந்த தேர்தலில் பொது எதிரணி வேட்பாளரின் கம்பளை தேர்தல் மேடைக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதான, மத்திய மாகாண சபை உறுப்பினர் மற்றும் முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்னவின் மகனுமான அனுராத ஜயரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவருடன் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட உடபாலத்த பிரதேசசபை உறுப்பினர் சுமுது பண்டார, கம்பளை நகர சபை உறுப்பினர் தரங்க விட்டச்சி மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆகியோரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கம்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து, கைதுசெய்யப்பட்டு, பின்னர் கம்பளை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது ஒருவரை தலா 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 20ம் திகதி இடம்பெறவுள்ளன. கட்சி அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை, அத்துமீறி உள் நுழைந்தமை மற்றும் துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
19வது திருத்தச் சட்டம் இரண்டு வாரத்தில் கொண்டுவரப்படும்-
உத்தேச அரசியல் யாப்பு மாற்ற சட்டமூல ஆவணம் இன்னும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 18வது திருத்தச் சட்டத்தை நீக்க 19வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. 19வது திருத்தச் சட்டத்திற்கு தேவையான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. 19வது திருத்தச் சட்டத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல ஏற்பாடுகள் காணப்படும் என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.