ஊழல், மோசடிகளை கண்டறிய ரணில் தலைமையில் விசேட குழு-

நாட்டில் கடந்த காலங்களில் நடந்த பாரிய ஊழல், மோசடிகளை கண்டறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 11 பேர் அங்கம் வகிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். குழுவில் ரணில் விக்ரமசிங்க (தலைவர்), மங்கள சமரவீர, பாட்டளி சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம், அநுரகுமார திஸாநாயக்க, ஆர்.சம்பந்தன், சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன், கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, சட்டத்தரணி வெலியமுன, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டவர்கள் அடங்குவதாகவும், இந்த குழுவில் ஜே.வி.பியின் தவைவர் அனுரகுமார திஸாநாயக்க இணைப்பாளராக செயற்படுவார் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ஜயந்த கெட்டகொடவின் இடத்திற்கு சரத் பொன்சேகாவை நியமிப்பது-

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு ஜயந்த கெட்டகொட முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் சட்டப் பிரிவிடம் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் காணப்படும் சட்ட ஏற்பாடுகள் குறித்து நமக்கு அறிக்கை சமர்பிக்கும்படி சட்டப் பிரிவினரிடம் கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சரத் பொன்சேகாவிற்கு வழங்குமாறு ஜயந்த கெட்டகொட நேற்று தேர்தல்கள் ஆணையாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு சரத் பொன்சேகா தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் அந்த கோரிக்கையை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கெட்டகொட கூறியுள்ளார். மேலும் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தால் அந்த வெற்றிடத்திற்கு சரத் பொன்சேகா நியமிக்கப்படுவாரா என்று அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கெட்டகொட கடிதம்மூலம் கேட்டுள்ளார்.

சஜின்வாஸ், கப்ரால் ஆகியோரின் கடவுச்சீட்டுகள் முடக்கம்-

பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டுகள் காலாண்டு காலத்திற்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களின் கடவுச்சீட்டுகளை முடக்கி வைக்குமாறு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளதாக பதில் குடிவரவு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு மூன்று மாதங்களுக்கு அவர்களின் கடவுச் சீட்டுகளுக்கு தடைவிதக்கப்பட்டுள்ளதாக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கிடைக்கப்பெற்ற பல்வேறு மோசடிகள் சம்பந்தமான முறைப்பாட்டை அடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஜேவிபி யினால் இந்த முறைபாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதம நீதியரசர் பதவி விலக மாட்டாரென அறிவிப்பு-

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல் பொய்யானது என, பிரதம நீதியரசரின் பேச்சாளர் சட்டத்தரணி விஜேரத்ன கொடிப்பிலி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த சட்டத்தரணி விஜேரத்ன கொடிப்பிலி, இந்தத் தகவல் பொய்யானது என மறுத்ததோடு, பிரதம நீதியரசர் பதவி விலகுவதாகவோ அல்லது பதவி விலகுவது குறித்த கடிதத்தையோ, அறிவிப்பையோ இதுவரை விடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜெ.ஜயவீர நியமனம்-வாகனங்கள் வழங்கப்படாது- 

புதிய இராணுவ ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜெ.ஜயவீர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். இப்பதவியில் இருந்த ருவான் வனிகசூரிய உடன் அமுலுக்கு வரும் வகையில் இராணுவ தலைமையகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இது இவ்விதமிருக்க ஜனாதிபதிக்கோ, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கோ புதிய வாகனங்கள் வழங்கப்படமாட்டாது என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கு பதிலாக அமைச்சர்கள், அந்தந்த அமைச்சகங்களில் தற்போது இருக்கும் வாகனங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

பாதுகாப்பு காரணமாக கொழும்பில் மூடப்பட்ட வீதிகள் திறக்கப்பட்டன-

கொழும்பில் பாதுகாப்பு வலயங்களில் மூடப்பட்டிருந்த பல வீதிகள் இன்றுமுதல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இத்தகவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாவத்தை, பாரன் ஜயதிலக மாவத்தை, செத்தம் வீதி, ஸ்டேன்லி விஜேசுந்தர சந்தி முதல் தும்முல்லை சந்தி வரை. ஆகிய வீதிகளே திறக்கப்பட்டுள்ளன.