கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா-

kachchative thiruvilaகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்திய, இலங்கை மீனவர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் தேர்ப் பவனி, திருப்பலி பூஜைகளும், கொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இதற்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான யாத்திரிகள் அங்கு சென்றுள்ளனர். கடற்படையினரால் இதற்கான படகு சேவைகள் நடத்தப்படுகின்றன. மேலும், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்பதற்காக இராமேசுவரத்திலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 4,296 பேர் சனிக்கிழமை புறப்பட்டுள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இராமேசுவரம் துறைமுகப் பகுதியிலிருந்து 110 படகுகளில் செல்லும் இவர்களின் பாதுகாப்புக்காக, இரு விசைப் படகுகள், இரண்டு நாட்டுப் படகுகளில் 20 மீனவர்கள் செல்வதாகவும், பக்தர்கள் பாதுகாப்புக்காக “லைப் ஜாக்கெட்´ வழங்க இராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா அரசியல் விவகாரச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்-

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்த இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை ஒத்தி வைக்கப்பட்டமை தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டுள்ளது. ஐநா அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த விஜயத்தின்போது அவர் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் உதவி பிரதமர் சுட்டுக் கொலை-

russia ethirkatchi suttukolaiரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த ரஷ்ய எதிர்க்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். போரிஸ் நெம்ட்சொவ் என்ற அவர் ரஷ்யாவின் முன்னாள் பிரதி பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். அவர் மொஸ்கோவில் வைத்து அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யுக்ரெயினில் இடம்பெறும் யுத்தத்துக்கு எதிராக மொஸ்கோவில் நடைபெறவிருந்த போராட்டத்துக்கு அவர் ஆதரவை வெளியிட்டு சில மணித்தியாலங்களில் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த கொலை சம்பவத்துக்கு ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமிர் புட்டின் கண்டனம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

லண்டன் விபத்தில் இலங்கைப் பெண் உயிரிழப்பு-

லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று நடந்த இச் சம்பவத்தில் 44 வயதான சுபாஹரி சோதிலிங்கம் என்ற இரு பிள்ளைகளின் தாயே பலியாகியுள்ளார். ஹெம்டனில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று அவர்மீது மோதி விட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இதனால் தலையில் படுகாயம் ஏற்பட்டதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். சமையல் தொழிலில் ஈடுபட்டுவரும் சுபாஹரி, உள்நாட்டு யுத்தம் காரணமாக 2006ஆம் ஆண்டு இலங்கையிலருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்தவராவார். அவரது கணவரான சோதிலிங்கம் செல்லத்துரை (44) தமது பிள்ளைகளின் கல்வி நிமித்தம் அவர்களுடன் இலங்கையில் தங்கியிருந்தார். இதனையடுத்து செல்லத்துரை தனது 18 வயது மகளான ஹம்சனாவுடன் கடந்த ஒக்டோபரில் லண்டன் சென்றார். இவர்களின் 22வயது மகன் இலங்கையில் அவர் கணனி அறிவியல் படிப்பை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலரி மாளிகையின் பூக்கள் கம்பஹாவுக்கு மாற்றம்-

alari marigai pookkal (1)அலரி மாளிகையைச் சுற்றியுள்ள சுவரை அழகுபடுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு, கடந்த ஆட்சியாளர்களினால் இந்த பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை பராமரிப்பதற்கான செலவு அதிகமாக காணப்படுவதன் காரணத்தினாலேயே இவையனைத்தும் அகற்றபட்டதாக, பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையிலிருந்து அகற்றப்பட்ட அனைத்து பூந்தொட்டிகளும் கம்பஹாவில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றை பராமரிப்பதற்கு ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகிறது. நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் நன்மை கருதியே இந்த நடவடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பிரதமரின் ஊடக செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் சீனப் பிரதமர் சந்திப்பு-

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், சீனாவின் பிரதமர் லீ கேகியாங்கிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. சீனாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது இலங்கையுடனான நல்லுறவுக்கு சீனா முக்கியத்துவம் வழங்கும் என்று சீனாவின் பிரதமரால் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதேவேளை நாட்டு மக்களின் அபிலாசைகளை முக்கியத்துவப் படுத்தும் வகையிலான வெளிவிவகார கொள்கையை வகுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மாலைதீவின் எதிர்க்கட்சிக் குழு இலங்கை வருகை-

மாலைதீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்த நாட்டின் எதிர்க்கட்சிக் குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. அவர்கள் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இதன்போது மாலைதீவில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது விடுதலை தொடர்பில் ராஜதந்திர உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக அந்த குழு இலங்கை வந்துள்ளது.

இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளின் விபரம் கோரல்-

sri lanka refugees in INDIAஇந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் இலங்கைக்கு திரும்பி வரவிரும்புகின்ற அகதிகள் பற்றிய விவரங்களை தருமாறு இந்திய தலைவர்களிடம் அரசாங்கம் கேட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்தாலும் எல்லோரும் திரும்பி வரவிரும்பமாட்டார்களென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இலங்கை திரும்ப விரும்புவோரின் விவரங்களை கேட்டோம். இந்தியாவில் நிரந்தரமாக குடியேறிய இலங்கை அகதிகளும் உள்ளனர். அவர்கள் திரும்பிவர விரும்பவில்லை. திரும்பி வர விரும்புவோரும் உள்ளனர் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

செட்டிக்குளம், மிஹிந்தலை பகுதிகளில் பலத்த காற்று, வீடுகளுக்கு சேதம்-

வவுனியா செட்டிக்குளம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் நேற்றுமாலை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் 13 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. செட்டிக்குளம் பகுதியில் 03 வீடுகளும் மிஹிந்தலை பகுதியில் 10 வீடுகளும் இவ்வாறு சேதமடைந்துள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனானா வானிலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியமிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சர்வதேச மகளீர் தினத்தினையொட்டி வலி மேற்கில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு-

வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் பிரதேச ரீதியில் சர்வதேச மகளீர் தினத்தினை ஒட்டி பல்வேறு வகையான போட்டிகள் ஏற்பாடு செய்யப்;பட்டுள்ளது. இதில் பாடசலை மாணவர்கட்கு 24 வகையான போட்டிகளும் பிரதேச மட்ட அமைப்புகளுக்கு 46 வகையான போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது. இவ் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு வெகு விமரிசையாக வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 08.03.2015 அன்று மாலை இடம்பெற உள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். இவ் நிகழ்வு வருடம் தோறும் தவிசாளரால் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. Read more