Header image alt text

கிழக்கு மாகாண முதல்வராக ஹாபிஸ் நசீர சத்தியப்பிரமாணம்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமாக இருந்த ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண முதலமைச்சராக இன்றுமாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில், திருகோணமலையில் இந்த சந்திப்பிரமாணம் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற உடன்படிக்கைக்கு அமைய இறுதி இரண்டரை வருடங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சு பதவி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் குறித்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் புலி உறுப்பினர் கைது-

கடத்தப்பட்ட வேன் ஒன்றினை போலியான முறையில் இலக்கம் மற்றும் வர்ணங்களை மாற்றி விற்பனை செய்ய முற்பட்ட முன்னாள் புலிகள் இயக்க (புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்) உறுப்பினரை மட்டக்களப்பு மாவட்ட விசேட பொலிஸ் பிரிவினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர். யாழ் மானிப்பயை சேர்ந்த குலேநதிரன் கார்த்தீபன் என்ற குறித்த சந்தேகநபர் 56-5647 என்ற வேனைக்கடத்தி அதன் எஞ்ஜின் இலக்கம் மற்றும் வர்ணத்தையும் மாற்றி காத்தான்குடிக்கு எடுத்துவந்து வர்த்தகர் ஒருவருக்கு விற்க முயன்றுள்ளார். குறித்த வேன் தொடர்பில் எழுந்த சந்தேகத்தின்கேரில் விசேட பொலிஸ் பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து குறித்த நபரும் வாகனமும் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.வெதகெரத தெரிவித்துள்ளார்.

2,200 பேருக்கு இரட்டைக் குடியுரிமை, மாவட்டச் செயலர்களுக்கும் இடமாற்றம்

முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் 2,200 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் 1,800 பேருக்கு இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது இவ்விதமிருக்க நாடு முழுவதிலும் கடமையாற்றும் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் இடமாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின்போது இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அத்துடன் புதிய தபால்மா அதிபராக டீ.எல்.பீ.ஆர். அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

படகு கவிழ்ந்ததில் ஒருவரை காணாவில்லை-

மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களின் படகு கவிழ்ந்ததன் காரணமாக ஒருவர் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை 6.30 மணியளவில் மூன்று பேர் படகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது படகு கவிழ்ந்ததன் காரணமாக மூன்று பேரில் இருவர் தப்பியுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் மட்டக்களப்பு கறுவப்பங்கேணியை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் விஜயகுமார் (40வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரை தேடும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை-

கடந்த கால யுத்தத்தின் போது, சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 275 பேரில் சிறிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் ஆராய்வதற்காக, மீளமைப்பு தொடர்பான விஷேட ஜனாதிபதி செயற்பாட்டு அணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசின் அடக்குமுறையே இப்போதும் தொடர்வதாக குற்றச்சாட்டு-

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செயற்படுத்தி வந்த அடக்குமுறை சட்டங்களையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போது செயற்படுத்தி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. முப்படையினருக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டமை தொடர்பில், முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் பொலிஸாரின் அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாட்டின் பல பிரதேசங்களுக்கு இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முழு நாட்டிலும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தவிர சில மாவட்டங்களின் கரையோர பிரதேசங்களும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய நிர்வாக மாவட்டங்களுக்கு அருகில் இருக்கும் தேசிய நீர் நிலைகள் இராணுவ அழைக்கப்படும் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. சாதாரண சட்டத்திற்கு அமைய பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், சட்டம் மற்றும் அமைதிகாக்கும் பணிகளுக்கு இராணுவத்தை அழைக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை. அவசரகால சட்டத்தின் கீழ் பொலிஸாரின் இந்த சட்டம் முப்படையினருக்கு வழங்கப்பட்டது. கைது செய்தல், வாகனங்களை சோதனையிடுதல், வாகனங்களை நிறுத்துதல், வீடுகளை பரிசோதித்தல், அடையாள அட்டை பரிசோதித்து அடையாள உறுதிப்படுத்தல் போன்ற பொலிஸாரின் அதிகாரங்கள் அவசரகாலச் சட்டத்தின் ஊடாக முப்படையினருக்கு வழங்கப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.