கடந்த அரசின் அடக்குமுறையே இப்போதும் தொடர்வதாக குற்றச்சாட்டு-

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செயற்படுத்தி வந்த அடக்குமுறை சட்டங்களையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போது செயற்படுத்தி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. முப்படையினருக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டமை தொடர்பில், முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் பொலிஸாரின் அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாட்டின் பல பிரதேசங்களுக்கு இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முழு நாட்டிலும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தவிர சில மாவட்டங்களின் கரையோர பிரதேசங்களும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய நிர்வாக மாவட்டங்களுக்கு அருகில் இருக்கும் தேசிய நீர் நிலைகள் இராணுவ அழைக்கப்படும் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. சாதாரண சட்டத்திற்கு அமைய பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், சட்டம் மற்றும் அமைதிகாக்கும் பணிகளுக்கு இராணுவத்தை அழைக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை. அவசரகால சட்டத்தின் கீழ் பொலிஸாரின் இந்த சட்டம் முப்படையினருக்கு வழங்கப்பட்டது. கைது செய்தல், வாகனங்களை சோதனையிடுதல், வாகனங்களை நிறுத்துதல், வீடுகளை பரிசோதித்தல், அடையாள அட்டை பரிசோதித்து அடையாள உறுதிப்படுத்தல் போன்ற பொலிஸாரின் அதிகாரங்கள் அவசரகாலச் சட்டத்தின் ஊடாக முப்படையினருக்கு வழங்கப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.