கொழும்பு நோக்கி வந்த விமானம் திரும்பிச் சென்றது-

malaysian flightநேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேஷியன் விமானம் மீண்டும் அந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது. மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன் இவ்வாறு திரும்பிச் சென்றது என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குடித்து விட்டு குழப்பம் விளைவித்தமையினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேஷியன் ஏயார்லயின்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து குறித்த விமானம் இன்று காலை 10.06க்கு நாட்டை வந்தடைந்ததாக தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கு இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியும்-

universityபல்கலைக்கழக அனுமதிக்கான தகைமைகளை பெற்றுள்ள மாணவர்கள் நாளைய தினம் முதல் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலான விபரங்கள் அடங்கிய கைநூல் வெளியிடப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து விண்ணப்பிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இம்முறை 24,000ற்கும் மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கு எண்ணியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வரவேற்பு-

maithribalaஅகில இலங்கை கம்பன் கழக கம்பன் விழா 2015ற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை தந்திருக்கின்றார் இந்நாட்டில் இன சௌஜன்யம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இது அமைந்திருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை கொழும்பின் தமிழ் சமூக பிரதிநிதிகள் இராமகிருஷ்ண மண்டப வாயிலில் இதய சுத்தியோடு வரவேற்றனர். டாக்டர் ரத்னகுமார், புரவலர் ஹாசிம் ஓமர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கலை இலக்கிய காவலர் தே.ஈசுவரன், மாலா சபாரத்தினம், தலைநகர் தமிழர் அரசியற் பிரதிநிதி கலாநிதி குமரகுருபரன், தலைநகர் தொழில் அதிபர் ஸ்ரீதரசிங் ஆஸ்திரேலிய பிரமுகர்கள் குமாரதாசன், திரு நந்தகுமார் ஆகியோர் இந்த வரவேற்பில் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முறை மாற்றம் குறித்து விஷேட கலந்துரையாடல்-

meetingபுதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் விஷேட கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது. பரிந்துரைக்கப்படும் புதிய தேர்தல் முறை தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையில் இறுதி இணக்கப்பாட்டை எட்டுவதே இச் சந்திப்பின் நோக்கமாகும். இதேவேளை இன்றுமாலை சில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பில் 22குடும்பங்கள் இடம்பெயர்வு-

rainகடும் மழை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் 22குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். மின்னல் தாக்கம் காரணமாக இவ்வருடம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதென நிலையம் அறிவித்துள்ளது.

கலாநிதி குமரகுருபரன் அவர்களுக்கு வாழ்த்து-

kumaraguruparanஜனநாயக மக்கள் காங்கிரஸ், கூட்டு முன்னணி தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் இன்று அகவை ஐம்பத்து ஏழினை நிறைவு செய்து 58இல் காலடி வைக்கின்றார். முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினராக கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை சமூகத்துடனும் பல்வேறு தோட்டங்களில் வாழும் மக்களுக்கும் பணியாற்றியவர். அதற்கு முன்னரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினராக மக்களால் தெரிவாகி சேவையாற்றியவர் . தேசிய அரசியலிலும் பெரும் பங்குபெறுபவர். ஜனாதிபதி பிரேமதாச காலத்தின் சர்வ கட்சி மாநாட்டு கூட்டங்களில் மூத்த சட்டத்தரணிகள் மோதிலால் நேரு ,விநாயக மூர்த்தி ஆகியோருடன் பங்குபற்றியவர். பின்னரும் ஜ.ம.மு பிரதிநிதயாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் முழுக்காலமும் தொடர்ந்து பங்கு பற்றியவர். தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்ததுடன் அதில் கைச்சாத்திட்ட நால்வரில் ஒருவர். இன்றும் தமிழ் தேசிய நலம்சார்ந்த செயட்பாட்டாளராக விளங்குகின்றார். ஆதலின் தமிழ் தேசிய பணிக்குழுவின் ஆரம்பகால உறுப்பினர். தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர்களில் ஒருவர். ஜனாதிபதி பொது வேட்பாளர், ஆட்சிமாற்ற தேர்தல் செயற்பாடுகளில் பங்கு பற்றியவர். என தனது வாழ்த்து செய்தியில் ஜனநாயக தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் ஐயாசாமி இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.