மீள்குடியேற்றிய மக்களுக்கு வீடுகள் கையளிப்பு-

ertrtttஅம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடியாறு கிராமங்களில் மீள்குடியேறிய மக்களுக்கு புதிதாக அமைக்கப்பட்ட 201 வீடுகளில் 100 வீடுகள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வு, இன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சரால் வீடுகளுக்கான பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவ்வீடுகள் தலா 2 இலட்சம் ரூபாய் செலவில் புனர்வாழ்வு அமைச்சினால் நிர்மானிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் கதிர்காம யாத்திரிகைகளுக்கான யாதிரியகள் தங்கிச் செல்லும் மண்டபத்துக்கான அடிகல் நட்டுவைத்ததுடன், மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சில அமைச்சுக்களை பிரதமரின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை-

rajitha ranilசெயற்பாட்டுத் திறனற்ற அமைச்சுகளின் நடவடிக்கைகளை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒரு செயற்பாட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பல்வேறு அமைச்சுளின் செயற்பாட்டுத் திறனற்ற முன்னெடுப்புகள் காரணமாக குறித்த இலக்கை இதுவரை எட்டமுடியாத நிலையில் இயங்குகின்றன. தற்போது, வெளிநாட்டமைச்சின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக பிரதமரின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் அதே வேளை, வெளிநாட்டமைச்சின் அதிகாரிகள் மட்டத்திலும் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று கல்வி அமைச்சின் சில நடவடிக்கைளிலும் அண்மைக்காலங்களில் பிரதமர் அலுவலகம் தலையீடு செய்திருந்தது. இதற்கு மேலதிகமாக கல்வி அமைச்சின் தேசிய மட்ட நடவடிக்கைகளை முற்றாக பிரதமர் அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கான முற்கொடுப்பனவு முறை-

highwayகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கான முற்கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அதிவேக வீதி மேற்பார்வை மற்றும் முகாமைத்துவப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் வாகனங்கள் கட்டணங்களை செலுத்துவதற்காக கருமபீடங்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாதென அந்த பிரிவின் பணிப்பாளர் அனுர தம்மிக்க குமார குறிப்பிட்டுள்ளார்.

முற்கொடுப்பனவு முறையின் மூலம் வாகனங்கள் அதிவேக வீதியூடாக தொடர்ந்து பயணத்தை முன்னெடுக்க இயலும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த புதிய முற்கொடுப்பனவு முறையில் தங்களைப் பதிவுசெய்து கொள்வதற்காக வாகனப் பதிவு சான்றிதழின் பிரதி, தேசிய அடையாள அட்டையின் பிரதி மற்றும் சாரதி அனுமதிப்பத்திர பிரதி என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் உண்ணாவிரதப் போராட்டம்-

sdfddfffதமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம மக்கள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாம் நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம மக்கள் நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேப்பாப்பிலவில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மக்களில் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை என்பவர் சாகும்வரை உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், ஏனையோர் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி பல முறைகள் போராட்டங்களை நடத்திய போதிலும், இன்னும் நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குடும்பப் பெண்ணின் மருத்துவ செலவுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் ஊடாக நிதியுதவி-

oஒட்டுசுட்டான் முத்து விநாயகபுரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் கலைமதியின் மருத்துவ செலவுக்காக லண்டன் நாட்டைச் சேர்ந்த ஓர் கருணை கொடையாளனால் 20,000 ரூபா வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக நேற்றையதினம்(24..03..2016)வழங்கி வைக்கப்பட்டது. இவரது கணவன் கடந்தகால யுத்தத்தின்போது தனது இடது கையினை இழந்து இரு கால்களிலும் எலும்புகள் முறிந்து மற்றும் நரம்புகள் அறுந்த நிலையில் சத்திர சகிச்சை செய்யப்பட்டு அவரால் சுயமாக இயங்க முடியாத நிலையில் பல இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்றவேளை முத்துலிங்கம் கலைமதி அவரையும் இரு பிள்ளைகளையும் நாளந்தம் கூலி வேலை செய்து தனது குடும்பத்தைப் பார்த்து வந்த வேளையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திடீர் சுகயீனம் காரணமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு அவருக்கும் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே முத்துலிங்கம் கலைமதியின் மருத்துவ செலவுக்காக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் 21.12.2015 அன்று ரூபா 30,000 மருத்துவ செலவுக்ககா வழங்கிவைக்கபட்டது குறிப்பிடத்தக்கது. (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

மின்மாற்றி வெடிப்புக்களுக்கு நாசகார வேலை காரணமாக இருக்கலாம்-

transformerநாட்டில் அண்மையில் மின்மாற்றிகளில் ஏற்பட்ட வெடிப்புக்களுக்கு நாசகார வேலைகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை நிராகரிக்க முடியாது என ஜேர்மனில் இருந்து வந்துள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் பியகம மற்றும் கொட்டுகொட ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக நீண்டநேர மின்சார விநியோகத்தடை ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில் மின்மாற்றி, குழாய் மாற்றிகளின் தன்னியக்க செயற்பாடுகளில் ஏற்பட்ட பிரச்சினையே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை பியகம மின்மாற்றி வெடித்தபோது அந்த நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர் தேனீர் பருகச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சாரசபை கூறுவதுபோன்று பணியாளர் குறித்த நேரத்தில் அங்கு இருந்திருப்பாராக இருந்தால் அவர் வெடிப்பின்போது மரணமாகியிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த வெடிப்புக்களுக்கு நாசகார வேலைகள் காரணமாக இருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது என்று ஜேர்மன் நிபுணர்கள் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கைக்கு அமெரிக்க கடற்படைக் கப்பல் வருகை-

american shipஅமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யு.எஸ்.எஸ் புளு ரிட்ஜ் (எல்.சி.சி 19) கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 2011 ஒக்டோபர் மாதத்துக்கு பின்னர் இலங்கை வரும் முதலாவது அமெரிக்க கடற்படை கப்பலாக இதுவாகும். கடற்கொள்ளையை எதிர்கொள்ளல், மனிதநேய உதவி வழங்குதல், பிராந்தியத்தின் பிரதானமான கடற்பாதையில் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் என்பவற்றுக்கான கடற்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட கடந்த மாதம் வொசிங்டனில் நடைபெற்ற இருநாட்டு பங்காளித்துவ உரையாடலின் தொடர்ச்சியாக இந்த விஜயம் அமைகின்றது. ‘சிறந்த நிலைத்திருத்தல் தன்மை, பாதுகாப்பு, செழுமை மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கினை போஷிப்பதற்கு அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான உறுதியான உறவானது உதவி புரியும்’ என அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் தெரிவித்தார். ‘இலங்கை போன்ற பிராந்திய பங்காளர்களுக்கான அமெரிக்காவின் ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாக இந்த அமெரிக்க கடற்படை கப்பலின் விஜயம் அமைந்துள்ளது’ என அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்போது, புளு ரிட்ஜ் கப்பலின் 900 மாலுமிகள், இலங்கையின் கடற்படையினருடன் இணைந்து இலங்கையின் துடிப்பான கலாசாரம் மற்றும் அதுசார்ந்த மக்களுடன் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், சமுதாய நிலையம் ஒன்றின் சுவர்கள் மற்றும் தளபாடங்களை புதுப்பித்தல், விளையாட்டு மைதான உபகரணங்களை அமைத்தல் மற்றும் தேவையுடையோருக்கு உணவு வழங்கல் போன்ற தன்னார்வ செயற்பாடுகளிலும் மாலுமிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த கப்பலில் அமெரிக்க கடற்படையின் இசைக்குழு உறுப்பினர்களும் வருகை தருவதுடன், கொழும்பில் பொது மக்களுக்காக இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். இன்று பிற்பகல் 6 மணி முதல் இரவு 8 மணி வரை விகாரமகாதேவி திறந்தவெளி அரங்கத்தில் இலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்து வழங்கும் இசை நிகழ்வும் இதில் உள்ளடங்கும். அத்துடன், நாளை நண்பகல் 12 மணிக்கு கொழும்பு மெஜஸ்டிக் சிட்டியிலும், பிற்பகல் 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் கொழும்பு டச்சு ஹொஸ்பிடல் அருகிலும் பொது மக்களுக்கான இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என்று மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.