யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள புகையிரதக் கடவையில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நுணாவில் மேற்கைச் சேர்ந்த 24 வயதுடைய விக்னா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் கடையில் தனது மோட்டார் சைக்கிளை திருத்துவதற்காக கொடுத்திருந்த நிலையில், அதனைப் பார்வையிட நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பயணித்து கடவையைக் கடந்தபோதே விபத்து நேர்ந்துள்ளது. படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இளைஞர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, குறித்த ரயில் கடவையில் தடுப்பு துலா அமைக்கப்படாமல் இருப்பதுடன், பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்கு சீராக இயங்கவில்லை எனவும் பொதுமக்களால் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.