புர்கா போன்ற உடைகளை தடை செய்யவும் இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு பரிந்துரைந்துரைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து எழுந்த 14 சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தீர்க்கும் பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கை நேற்று முன்தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடத்தில் முகத்தை மறைத்து முகத்திரை அணிந்திருக்கும் போது பொலிஸாருக்கு அடையாளப்படுத்த தவறினால் பிடியாணை இன்றி கைதுசெய்ய முடியும் என்று அந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது.

இன, மத அடிப்படையிலான கட்சிகளை பதிவு செய்வதை நிறுத்தி வைக்கும் சட்டத்தை இயற்ற தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய மதராஸ் நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களையும் மூன்று ஆண்டுகளுக்குள் சாதாரண கல்வி முறைக்குள் உள்ளவாங்க வேண்டும் என்று குறித்த குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி மதராஸ்களை உயர் கல்வி அமைச்சின்கீழ் கொண்டுவர வேண்டும் என்ற முந்தைய யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்காக மட்டும் இஸ்லாமிய மௌலவி கல்விக்காக மட்டும் மதராஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்து, முஸ்லிம் மத மற்றும் கலாசார விவகார திணைக்களத்தின் கீழ் மதராஸ்களை ஒழுங்குபடுத்த சிறப்பு குழுவை நியமிக்கவும் பரிந்தரைத்துள்ளது.

மேலும் தேசிய பாதுகாப்பு கொள்கை, தேசிய மற்றும் சர்வதேச புதிய முன்னேற்றத்துக்கு ஏற்ப குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை திருத்துதல், முஸ்லிம் விவாக மற்றும் விவகாரத்து சட்ட திருத்தம், வஹப் சட்ட திருத்தத் தேவை, ஹலான் சான்றிதழ் செயல்முறை மற்றும் அனைத்து மதங்களுடனும் அமைச்சொன்றை உருவாக்குதல் தொடர்பிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.