கொரோனா வைரஸ் காரணமாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்த்து, ஏனைய பிரதேசங்களில் 2021ஆம் ஆண்டுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்,

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்காக தனியான பஸ்களை வழங்குவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாலசேகரம், இன்று (10) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாடசாலை சமூகம், பொதுப்போக்குவரத்தில் பயணித்தால், தொற்று ஏற்பட வாய்ப்புண்டு என்றும் எனவே, பாடசாலை சமூகத்துக்காக மாத்திரம் தனியான பஸ்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், சங்கத்தின் ஊடாக முன்மொழியப்பட்டுள்ள இந்த விடயத்தை பரிசீலனை செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைக்க, மலையக அமைச்சர்கள் அமைச்சர்களும் முன்வரவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.