வடக்கு மாகாணத்தில், இவ்வருடம்  மார்ச் மாதம் தொடக்கம் நேற்று (23) வரை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,004ஆக அதிகரித்துள்ளதாக,  வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

 அத்துடன், வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, இன்று (24) இரண்டாவது தடவையாக  பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

 கடந்த ஜனவரி மாதம் வவுனியா – பட்டாணிச்சூரில் கண்டுபிடிக்கப்பட்ட சமூகப்பரவலையடுத்து, வவுனியா நகரம் முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றியவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் பலருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

அவர்களுடன்  நெருங்கி பழகியவர்கள் தொடர்புபட்டவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றியவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலையடுத்து, மீண்டும் நகரிலுள்ள வர்த்தகர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புகள் காணப்படுவதையடுத்து, பொது மக்களின் நன்மை கருதி, வவுனியா வர்த்தகர் சங்கம், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையுடன் இணைந்து,  வவுனியா நகரிலுள்ள வர்த்தகர்களுக்குப் பி.சி .ஆர் பரிசோதனைகள், இன்று முன்னெடுக்கப்பட்டன.

மேலும், இந்த மாதம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் உடலில் உள்ள வைரஸின் அளவு மிகவும் கூடுதலாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனால், ஏற்கெனவே இனங்காணப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலர் இலகுவாக தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலமை பாரதூரமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.