கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில், தீப்பற்றி எரிந்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல்
கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கின்ற நிலையில், அக்கப்பல் ஏற்றிவந்த
அபாயகரமான இராசயனங்களின் பட்டியலை சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய
நிலையம் வெளியிட்டுள்ளது.

இந்த கப்பலின் கண்டெய்னர் ஒன்றில் அபாயகரமான இரசாயனங்கள்
இருந்ததோடு, ஏனையக் கண்டெய்னர்களின் அழகு சாதனப் பொருள்கள்,
அலுமினியத் தயாரிப்புப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், உணவுப்
பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் காணப்பட்டதாக மத்திய நிலையத்தின்
நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக்கொண்ட தகவல்களை
பொதுமக்களின் நன்மைக் கருதியும், நீர்கொழும்பு உள்ளிட்ட கடற்கரையில்
கரையொதுங்கும் இக்கப்பலின் இராசாயனப் பொருள்களை பொதுமக்கள் எடுத்துச்
செல்வதைத் தடுக்கும் வகையிலுமே இத்தகவல்கள்
வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இக்கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வது தொடர்பில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று முன்தினம் (01)
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது
தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில், 1,486 வகையான பொருள்கள்
அடங்கிய கொள்கலன்களுடன் அக்கப்பல், மூழ்கடிக்கப்பட்டுகொண்டிருக்கிறது.
அனர்த்தத்துக்கு உள்ளான இக்கப்பல் மூழ்கும் அபாயம் இருப்பதாக கடல் சார்
மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள்
ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதோடு, அப்படி நிகழ்ந்தால், கடல் சூழலுக்கு
ஏற்படக்கூடிய சேதத்தை குறைக்க கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்வது
மிகவும் பொருத்தமான நடவடிக்கை எனவும் முன்மொழியப்பட்டது.

அதன்படி, தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் சட்டமா அதிபரின்
ஆலோசனையின் பேரில், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின்
தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலை ஆழ்கடலுக்கு
கொண்டு செல்ல உடனடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி
அறிவுறுத்தினார்.
மேலும், இந்த விடயத்தில் எடுக்கப்படும் தீர்மானம், தொழில்நுட்ப விடயங்களின்
அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அரசியல் விடயங்களை
அதனுடன் சம்பந்தப்படுத்தக்கூடாது என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.