இன்று (ஆகஸ்ட் 30) சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்.. இதனை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த கவனயீர்ப்பு பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை சந்தியிலிருந்து  இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் இன்று பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, வவுனியா நகரின் ஊடாக பழைய பஸ் நிலையம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனிடையே, 2018 ஆம்  நாளாக வவுனியா பழைய தபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்  தமிழர் தாயகம் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் பழைய தபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்த கவனயீர்ப்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதனிடையே, யாழ். நாவலர் வீதியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாகவும் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.

மன்னார் மாவட்டத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி, மன்னார் மத்திய பிரதான வீதி, சுற்றுவட்ட  வீதி வரை சென்று அங்கு கவனயீர்ப்பும் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு, தமது பிள்ளைகளின் நிழற்படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி அவர்கள் கவனயீர்ப்பில் பங்கேற்றனர்.

திருகோணமலை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினரும் அனுராதபுரம் சந்தியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்புப் பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் பேரணி, பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமை வரை சென்றதுடன், அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை – திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அம்பாறை அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி,
திருக்கோயில் மணிக்கூட்டு கோபுரம் வரை இடம்பெற்று, அங்கு கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தங்களுடைய உறவுகளைத் தேடி பலரும் போராட்டத்தில் ஈடுபடுகின்ற நிலையில், சிலர் உயிரிழந்த துர்பாக்கிய சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

முல்லைத்தீவு  – புதுக்குடியிருப்பு, மந்துவில் கிராமத்தை சேர்ந்த அல்பிரட் தினு என்ற இளைஞர் கடந்த 2009 ஆம் ஆண்டு  இறுதி யுத்தத்தின் போது காணாமற்போயுள்ளார். 6 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த மகனான அல்பிரட் தினு தனது 16  ஆவது வயதில் காணாமற்போயிருந்தார்.

தாய் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அல்பிரட் தினு தன்னுடைய  அம்மம்மாவுடனே இளமைப் பருவத்தைக் கழித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது இவர் காணாமற்போன நிலையில்,  அவரின் பாட்டி தனது பேரனைத் தேடி போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில்,  2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி அல்பிரட் தினுவின் பாட்டியான செல்வம் சிவபாக்கியம் காலமானார்.