இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலில் அண்டை நாடு என்ற அடிப்படையிலும், புத்தாண்டு பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டும் இந்தியா இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன்போது நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பயனுள்ள கலந்துரையாடலில் பங்கேற்கத் தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். பங்காளித்துவம் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் இந்த மாநாடு இலங்கை பிரகாசமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு தேவையான சூழலை உருவாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாத இறுதியில் லண்டனில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அரசாங்கத்துக்கும் சர்வதேச கடன் பத்திரதாரர்களுக்கும் இடையில் 2 விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எஞ்சியுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக அவர் தெரவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். தற்போது காணப்படும் மோதல் நிலைமைகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிப்பதற்காக விமான ஆசனங்களைப் பதிவு செய்த இலங்கையர்கள், அந்தந்த நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பயணத் திகதியை மாற்றிக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் அறிவுறுத்தியுள்ளார்.