இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் துணை அமைச்சருமான சன் ஹையான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோரினதும், சீன தூதுக்குழுவின் அதிகாரிகளினதும் பங்குபற்றுதலுடன் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் துணை அமைச்சருமான சன் ஹையான் இதன்போது உறுதியளித்துள்ளார்.

அதேநேரம், பொருளாதாரம், வணிகம் மற்றும் அரசியல் உள்ளிட்ட துறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பில் இலங்கையும் உள்வாங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.